ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
பாஜக சட்டமன்ற குழு தலைவர் நாயினார் நாகேந்திரன் தலைமையிலான குழு இன்று(செப்டம்பர் 10) ஆளுநரை நேரில் சந்தித்தது.
அப்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக நிர்வாகிகள் முறையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது செந்தில்பாலாஜி வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சமரசம் ஆகிவிட்டதாகக் கூறி அந்த வழக்கை ரத்து செய்துள்ளது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது நீதிபதிகள் ஒரு வரலாற்று தீர்ப்பை கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கொடுத்து சமரசம் செய்தார்கள் என்பதிலேயே குற்றம் நிரூபணம் ஆகியிருக்கிறது. எனவே செந்தில் பாலாஜி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
ஊழல் அமைச்சரை இன்னும் பதவியில் வைத்திருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது. எனவே அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் முறையிட்டு இருக்கிறோம்” என்றவரிடம் அதிமுகவில் எடப்பாடி. பன்னீருக்கு இடையே நடக்கும் மோதல் பற்றி கேட்கப்பட்டபோது,
“அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சினை. அதில் பாஜக ஒருபோதும் தலையிடாது. அக்கட்சித் தலைவரை தொண்டர்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “2024 தேர்தல் வரும்போது, மோடியின் 10 ஆண்டு சாதனை, திமுகவின் 3 ஆண்டு வேதனையை பார்த்து மக்கள் தீர்ப்பளிப்பார்கள். பெரும்பான்மையான வாக்குகளை பாஜக வெல்லும். ராகுல்காந்தி தொடங்கியிருப்பது இந்தியாவை இணைக்கும் யாத்திரை அல்ல, இந்தியாவை பிரிக்கும் யாத்திரை” என்றும் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு தற்கொலைகள் பற்றிய கேள்விக்கு, “நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் பிரச்சனைகள் இருந்தது உண்மை தான். சிபிஎஸ்இ பாட திட்டம் மற்றும் மாநில அரசு பாட திட்டம் இடையே இருந்த வித்தியாசமும் ஒரு காரணம். தற்போது பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுவிட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைப்பதற்கு நீட் தேர்வே காரணம். நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பத்தான் போகிறார். தமிழ்நாடு அரசு நீட் எதிர்ப்பு மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
மேலும், பல்வேறு போராட்டங்களையும் மீறி மின் கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு. இன்று தமிழ்நாட்டின் கருப்பு நாள் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
கலை.ரா