கோவை மேயர்: சிறையில் இருந்து செலக்ட் செய்த செந்தில்பாலாஜி

Published On:

| By Aara

கோவை மாநகராட்சியின்  புதிய மேயராக  கவுன்சிலர் ரங்கநாயகி  திமுக தலைமையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியின் மேயராக ஏற்கனவே இருந்த  கல்பனா ஆனந்தகுமார்  சக கவுன்சிலர்களின் கடுமையான எதிர்ப்பையடுத்து  ராஜினாமா செய்த நிலையில்,  இன்று (ஆகஸ்ட்  6) கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தல்  நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு நேற்று (ஆகஸ்ட் 5) நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என்.நேரு, பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்ட கவுன்சிலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில்  புதிய மேயராக  கவுன்சிலர் ரங்கநாயகியை  தேர்வு செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மண்டல தலைவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே  மேயர் பதவிக்கு முட்டி மோதிய நிலையில், சாதாரண கவுன்சிலராக இருக்கும் ரங்கநாயகி இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது எப்படி?

திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

 “2021 ஆம் ஆண்டு  கோவை  மாநகராட்சி தேர்தல்  நடந்தபோது  பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி  தலைமையில்தான் கோவை தேர்தல் பணிகள் முழுதும்  நடந்தன.

அப்போது  அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த  தனது ஆதரவாளரும், முன்னாள் கோவை மேயருமான கணபதி ராஜ்குமாரிடம்  (இப்போதைய கோவை எம்பி)   ஆறு கவுன்சிலர்கள்  தேர்வு செய்யும் பொறுப்பை  கொடுத்திருந்தார் செந்தில் பாலாஜி.

அந்த வகையில்  கணபதி ராஜ்குமாரால்  தேர்வு செய்யப்பட்டவர் தான்  29 ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி.   பாரம்பரியமான  திமுக குடும்பத்தைச் சேர்ந்த  ரங்கநாயகி  கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில்  கோவை மக்களவைத் தொகுதிக்கான  திமுக வேட்பாளராக  கணபதி ராஜ்குமாரை  சிறையில் இருந்தபடியே  பரிந்துரைத்தார்  செந்தில் பாலாஜி.  தலைமையும் அவருக்கே  வாய்ப்பு வழங்கியது.  அவர் வெற்றி பெற்று தற்போது எம்பி ஆக இருக்கிறார்.

இதே போல  இப்போது நடக்கும் மாநகராட்சி மேயர் தேர்தலிலும்,  செந்தில் பாலாஜியின்  செலக்ஷன்  யார் என்று  கேட்கப்பட்டிருக்கிறது.  சிறையில் இருந்தபடியே செந்தில்பாலாஜி வழக்கறிஞர்கள் மூலம் கோவை திமுகவினரோடு நடத்திய ஆலோசனையில்…  கணபதி ராஜ்குமார் மூலமாக  தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர் ரங்கநாயகியை  பரிந்துரைத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

இந்த வகையில் தான்  கவுன்சிலர் ரங்கநாயகி, மேயர் ரங்கநாயகியாக  பிரமோஷன் பெற்றிருக்கிறார். இதற்கிடையில்  கவுண்டர் சமுதாய லாபி மீண்டும்  கோவை மாநகராட்சியில் வலுப்பெற்று இருப்பதை  பிற சமுதாயத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகளே  குறை சொல்வதையும் காண முடிகிறது,

 நம்மிடம் பேசிய சில திமுக  புள்ளிகள்,

“நடந்து முடிந்த  மக்களவைத் தேர்தலில்  திமுக வேட்பாளராக கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த  கணபதி ராஜ்குமார் போட்டியிட்டார்.  அதிமுக சார்பில்  சிங்கை ராமச்சந்திரன்  போட்டியிட்டார். அவர் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதேபோல  பாரதிய ஜனதா கட்சி சார்பில் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாமலை போட்டியிட்டார் .

இங்கே  இருக்கக்கூடிய  கொங்கு வேளாளர்  கவுண்டர்  சங்கங்கள்  பகிரங்கமாக அதிமுக வேட்பாளருக்கும் பாஜக வேட்பாளருக்கு தான் ஆதரவு  திரட்டினார்களே தவிர,  திமுகவுக்கு கவுண்டர் சங்கங்கள்  ஆதரவு அளிக்கவில்லை.

இந்த நிலையில்,  பிற சமுதாயத்தை  சேர்ந்தவர்களின்  ஆதரவோடு தான்  கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

இப்படி இருக்க  மேயர் பதவியை எம்பி தேர்தலில் திமுகவின் வெற்றிக்குப் பங்காற்றிய சமுதாயங்களில் ஒன்றுக்கு கொடுத்திருந்தால் அது  சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும்.

ஆனால், மீண்டும்  கொங்கு வேளாளர்களிடமே  மேயர் பதவி  ஒப்படைக்கப்பட்டு இருப்பது திமுகவை ஆதரிக்கும் பிற  சமுதாயத்தினருக்கு  நெருடலாக  அமையும்.

மேலும்,  தற்போது கோவை திமுகவின் மூன்று மாவட்ட  செயலாளர்களில்   கோவை தெற்கு மாவட்ட செயலாளரான  தளபதி  முருகேசன் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். கோவை மாநகர் மாவட்ட செயலாளர்  கார்த்திக் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

கோவை வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி ஒக்கலிக்க கவுடர் சமுதாயத்தை சேர்ந்தவர். மேலும், தற்போதைய  துணை மேயர்  வெற்றிச்செல்வன்   நாயுடு சமுதாயத்தை  சேர்ந்தவர். ஏற்கனவே  கோவை எம்பி யாக இருக்கும் கணபதி ராஜ்குமார் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

இப்படி  திமுகவின் முக்கிய நிர்வாக பதவிகள்  நாயுடு,  கவுண்டர் சமுதாயங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற நிலையில்… மேயர் பதவியை  வேறொரு சமுதாயத்துக்கு  கொடுத்திருந்தால்  அது வருகிற சட்டமன்ற த் தேர்தலை நோக்கிய  பயணத்திற்கான  சரியான நடவடிக்கையாக அமைந்திருக்கும்” என்கிறார்கள்.

அதேநேரம்  திமுக  தலைமைக்கு நெருக்கமான   கோவை மாவட்ட பொறுப்பாளர் ஈரோடு முத்துசாமி வட்டாரத்தில் விசாரித்த போது,

 “சமுதாயம் என்ற அடிப்படையில் அல்லாமல்  பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்து தான் இந்த மேயர் தேர்வு  நடைபெற்று இருக்கிறது”  என்று கூறுகிறார்கள்.

சிறையில் இருந்தபடியே  செந்தில் பாலாஜி  இந்த மேயர் தேர்தலை  ஸ்கெட்ச் போட்டு இயக்கியிருக்கிறார்  என்று சொல்கிறார்கள்  அவரது ஆதரவாளர்கள்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தங்கலான்… விக்ரம் குறித்து பா.ரஞ்சித் சொன்ன அந்த விஷயம்!

Olympics 2024: அரையிறுதிக்கு முன் இந்திய ஹாக்கி அணிக்கு பெரும் பின்னடைவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.