அமித் ஷா வந்தபோது ஏற்பட்ட மின்வெட்டு திட்டமிட்டதா?: செந்தில்பாலாஜி பதில்!

அரசியல்

வணிக நிறுவனங்களுக்கான மின்‌ கட்டணம் மத்திய அரசின்‌ அறிவுறுத்தலின்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள எம்‌.ஜி.ஆர்‌. மார்க்கெட்டில்‌ கடைகள்‌ கட்டும் பணிகளை மின்சாரத்‌துறை அமைச்சர் ‌ செந்தில்‌ பாலாஜி இன்று (ஜூன் 12) துவக்கிவைத்தார்‌.

அப்போது அவரிடம் அமித் ஷா வந்தபோது ஏற்பட்ட மின்தடை, மின் கட்டண உயர்வு மற்றும் வருமான வரி சோதனை உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசின்‌ அறிவுறுத்தலின்படி உயர்வு!

அதற்கு அமைச்சர்‌ செந்தில்‌பாலாஜி பதிலளித்து பேசுகையில், ”மின்கட்டண உயர்வை பொருத்தவரை அரசு மற்றும் மின்வாரியம் சார்பில் தெளிவான விளக்கம்‌ அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு மின்‌ கட்டண உயர்வு இல்லை. விசைத்தறி, கைத்தறி, விவசாயத்திற்கான இலவச மின்சாரம்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌ என்று உறுதி வழங்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்களுக்கான மின்‌ கட்டணத்தில் மட்டுமே‌ சிறிய அளவிலான மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது. அதுவும் மத்திய அரசின்‌ அறிவுறுத்தலின்படி மின்சார ஒழுங்கு முறை ஆணையம்‌ மின்‌ கட்டணத்தில்‌ மாற்றம்‌ செய்துள்ளது” என்றார்.

தற்செயலாக‌ நடந்த நிகழ்வு!

மேலும் அவர், ”சென்னை விமான நிலையத்தில்‌ அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை எதிர்பாராத வகையில் தற்செயலாக‌ நடந்த நிகழ்வு. அது உடனடியாக 40 நிமிடத்திற்குள் சரி செய்யப்பட்டு மின்சாரம்‌ வழங்கப்பட்டது.

அரசியல்‌ செய்யலாம்‌ என்ற எண்ணம்‌ எடுபடாது!

அமித் ஷா வரும்போது ஏற்பட்ட மின்தடை தொடர்பாக குற்றம்சாட்டிய ஓபிஎஸ் வீட்டில் மின் தடை ஏற்பட்டுள்ளதா? அதுபோல் பாமக தலைவர்‌ அன்புமணி, மது விற்பனையில்‌ 2 லட்சம்‌ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்‌.

ஆண்டிற்கே 45 ஆயிரம்‌ கோடிதான்‌ மது விற்பனை நடக்கிறது. எப்படி 2 லட்சம்‌ கோடி இழப்பு ஏற்படும்‌? இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாதது ஏன்?

புதிய தமிழகம்‌ கட்சி தலைவர்‌ கிருஷ்ணசாமி போன்றோர்‌ நாடாளுமன்ற தேர்தலில்‌ ஒரு சீட்‌ வாங்க சில கருத்துக்கள்‌, அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள்‌. எதில்‌ அரசியல்‌ செய்ய வேண்டும்‌ என்பதை மறந்து எதை வேண்டுமானாலும்‌ அரசியல்‌ செய்யலாம்‌ என நினைப்பவர்களின்‌ எண்ணம்‌ திராவிட மண்ணில்‌ எடுபடாது.

மக்கள்‌ நலன்‌ சார்ந்த குற்றச்சாட்டுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்‌. அரசியல் ஆதாயத்துக்காக சொல்லப்படும்‌ கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை” என்றார்‌.

என்‌ வீட்டிற்கு வரவில்லை!

தொடர்ந்து, “வருமான வரித்‌ துறை அதிகாரிகள்‌ என்‌ வீட்டிற்கு வரவில்லை. என்றாலும் நடைபெற்ற இடங்களில் வருமான வரித்‌ துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள்‌ கேட்ட ஆவணங்களை கொடுத்துள்ளனர்‌. கூடுதல்‌ ஆவணங்கள்‌ கேட்டாலும்‌ சமர்ப்பிக்க தயாராக உள்ளார்கள்‌” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

இணையத்தை கலக்கும் மெட்ரோ டான்ஸ்!

WTC Final: இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு ஐசிசி அபராதம்!

senthilbalaji reply on power cut
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *