செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு: இன்று மீண்டும் விசாரணை!

Published On:

| By Monisha

Senthil Balaji recruitment petition

அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 27) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது அவர் பைபாஸ் சர்ஜரிக்கு பிறகு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

இதனிடையே செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு கடந்த ஜூன் 22 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு விசாரணை தொடங்கிய உடனேயே யார் தரப்பில் வாதத்தை முன்வைப்பது என்பதிலேயே பரபரப்பு தொடங்கிவிட்டது.

அமலாக்கத்துறை தான் முதலில் வாதத்தை முன் வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் துஷார் மேத்தாவும் செந்தில் பாலாஜி தரப்பில் தான் முதலில் வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் வாதிட்டனர்.

குறிப்பாக ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறை ஆட்கொணர்வு மனுவிற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையை ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் என்பதை மேற்கோள் காட்டினார் என்.ஆர்.இளங்கோ.

தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் முதலில் வாதத்தை முன்வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ 1972-ல் வெளியான ராமச்சந்திர ராவ் தீர்ப்பு, சஞ்சய் தத், நக்கீரன் கோபால் ஆகியோரது வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேற்கோள்காட்டி வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து இரு தரப்பும் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

அதன்படி இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வர உள்ளது.

மோனிஷா

வள்ளுவர் கோட்ட போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: ரூ.195 கோடியில் மேம்பாலம்!

ஊட்டி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel