பட்ஜெட் தாக்கல் முடிந்த பின் அதுதொடர்பாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்தும் தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருப்பது திமுக சீனியர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இன்று (மார்ச் 20) தமிழக சட்டப்பேரவையில் 2023-2024 ஆம் ஆண்டுக்காகத் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் 15 முதல் தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி, ‘தகுதியான பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்கிறீர்கள். அந்த தகுதியை எப்படி தீர்மானிப்பீர்கள். இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட். இந்த பட்ஜெட் மின்மினிப்பூச்சி போன்றது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது’ என்று அரசை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ’பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பேசியிருப்பது மிக மட்டமான அரசியல்.
கடந்த காலங்களை அவர் திரும்பி பார்க்க வேண்டும். அவரது ஆட்சியில் தமிழ்நாடு எந்த நிலையிலிருந்தது என அவர் பார்க்க வேண்டும்.
இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் தனது திறமையால், தன்னுடைய உழைப்பால் தமிழகத்தை தலை நிமிரச் செய்துள்ளார்’ என பதிலளித்தார்.
சமீப மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றம் கூடும்போதெல்லாம் அதுதொடர்பான நடவடிக்கைகள் மற்றும் விவகாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சியான திமுக தரப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலக வளாகத்தில் விளக்கங்கள் அளித்து வந்தார்.
கடந்த 2022 ஆம் வருட பட்ஜெட் தாக்கலின் போது, மூத்த அமைச்சரான தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது எதிர்க்கட்சியினருக்கு, ‘ உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும்’ என்று பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று பட்ஜெட் தொடர்பான அரசின் விளக்கங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் அளித்துள்ளார்.
இது பட்ஜெட் தாக்கல் நடைபெற்ற பிறகு வெளியே வந்த திமுகவின் அமைச்சர்கள் மற்றும் சீனியர் சட்டமனற உறுப்பினர்களிடையே முக்கியமான பேசுபொருளாகியுள்ளது.
’அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் அவரை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தான் சட்டமன்ற விவகாரங்கள் தொடர்பாக அரசின் விளக்கங்களை மக்களுக்கு தெரிவிக்க செந்தில் பாலாஜியை முதலமைச்சர் பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் கிராஃப் மேலும் உயர்ந்திருக்கிறது’ என்கிறார்கள் சில எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாகவே.
பிரியா
பட்ஜெட்: அதிருப்தியில் தலைமை செயலக சங்கம்!