ED வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு : ஜூலை 16ல் உத்தரவு!

அரசியல்

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில்,  “ஓராண்டுக்கும் மேலாக  ஜாமீ்ன் கிடைக்காமல் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் அமலாக்கத் துறை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது.

இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டுமென கோரப் போகிறார்கள்” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இன்று (ஜூலை 12) வழக்கு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை வரும் ஜூலை 22ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சிறப்பு அமர்வில் உள்ள வழக்குகளை விசாரிக்க செல்வதால், செந்தில் பாலாஜியின் வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் கூறினர்.

இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பான மனுவில் செந்தில் பாலாஜி, “போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பினை தள்ளிவைக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அல்லி,   ‘அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ஆம் தேதி பிறப்பிக்கப்படும்’ என  அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

திருமணத்தை தடுக்கும் உள்ளூர் இன்ஃபார்மர்கள்… கொதித்தெழுந்த 90’ஸ் கிட்ஸ்!

மலை கிராமம் டூ என்.ஐ.டி… அறுபது வருட கனவை நனவாக்கிய ‘அசுர’ மாணவிகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *