senthilbalaji minister post case

செந்தில் பாலாஜி பதவி பறிப்பு வழக்கு : காரசார வாதம்!

அரசியல்

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை என செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் பதவியை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

“சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்” என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் வழக்குத் தொடர்ந்தார்.

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் இன்று (ஜூலை 28) தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில்  மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜரானார்.

அரசியல் சட்ட பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி வாதாடிய வழக்கறிஞர் சண்முக சுந்தரம்,   “அமைச்சரவையின் திருப்தி அடிப்படையில் மட்டுமே ஆளுநர் செயல்பட முடியும்.

அமைச்சரவைக்கு இணையாக நிர்வாகம் நடத்த ஆளுநருக்கு அரசியல் சட்டம் அதிகாரம் வழங்கவில்லை. ஆளுநரோ, குடியரசு தலைவரோ அதிகாரத்தை தனிப்பட்ட முறையில் செயல்படுத்த முடியாது என்று அரசியல் சட்டம் கூறுகிறது.

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க, அரசியல் சட்டமோ, சட்ட விதிகளோ தடை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது” என்று வாதாடினார்.

“எம்.எல்.ஏ.க்களை விட அமைச்சர்கள் குறைவாகவே ஊதியம் பெறுவதாகவும், எம்.எல்.ஏ.க்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வாங்குவதாகவும், அமைச்சர்கள் 76 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் வாங்குகின்றனர் எனவும் தெரிவித்தார் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம்.

மனுதாரர் எம்.எல்.ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக்திவேல், “ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக செயல்பட முடியாது. அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது.

அமைச்சரவை ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றாலும், சில விதிவிலக்குகள் உள்ளது. அதுபோன்ற சூழல் இருக்கிறதா இல்லை என பார்க்கவேண்டும்” என்று வாதிட்டார்.

ஜெயவர்த்தன் தரப்பில்   மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி,  “சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசு பணியாற்ற முடியாது என்பதால் அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தன் கண்முன் நடக்கும் சட்டவிரோதங்களை கண்டு, சட்ட அதிகாரம் இல்லை என ஆளுநர் இருக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை விரும்பவில்லை என ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பார் என முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் நம்பிக்கையை பெறாத நபர் அமைச்சராக நீடிக்க முடியாது” என வாதிட்டார்.

இதையடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

பிரியா

அண்ணாமலை நடைபயணம்: மதுரை வந்தடைந்தார் அமித்ஷா

நிலத்தை மீட்டு மக்களிடம் கொடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *