அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்தாலே பதவியில் தொடர முடியாது என்று எங்கேயாவது முன்னுதாரண தீர்ப்பு இருக்கிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. வரும் ஜூலை 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜியை வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதுபோன்று செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் வழக்கை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜி வகித்த இலாகா வேறு இரு அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.
இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. ஜெயவர்தன் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “அரசமைப்புச் சட்டத்தின் படி அமைச்சரை நியமிக்கும் மற்றும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது.
செந்தில் பாலாஜி கேபினட் அமைச்சராக இருப்பதால் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ரகசிய கோப்புகளை அணுக முடியும். இது ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிரானது.
செந்தில் பாலாஜி எந்தத் துறையிலும் அமைச்சராக இல்லாதபோது பொது கருவூலத்திலிருந்து பணம் செலவிடப்படுவது நியாயமற்றது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (ஜூலை 21) தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
- அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரியார் ஆஜராகி வாதாடினார்.
“அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் ஊழல் வழக்கில் சிக்கினால் பதவி விலக வேண்டும். செந்தில் பாலாஜி எம்எல்ஏவாக வேண்டுமானால் தொடரலாம், ஆனால் அமைச்சராக பதவி வகிக்க கூடாது.
அமைச்சராக பதவி வகித்து சம்பளம் பெறுவது சட்டவிரோதமானது. அவரை கேள்வி கேட்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க முடியும். தொடர்ந்து அவர் சம்பளம் பெற்றால் அரசு பணம் வீணடிக்கப்படும். செந்தில் பாலாஜி பதவியைப் பறிக்க ஆளுநருக்கும் உயர் நீதிமன்றத்திற்கும் முழு அதிகாரம் உள்ளது” என்று வாதாடினார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்தாலே பதவியில் தொடர முடியாது என்று எங்கேயாவது முன்னுதாரண தீர்ப்புகள் உள்ளதா?. ஏதாவது சட்ட விதிகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பி இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக விசாரணையை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரியா
காவிரி நீர்… மத்திய அமைச்சரை சந்தித்தும் பலனில்லை: துரைமுருகன்
”நடிகர் சிவாஜியை விட மிகப்பெரிய நடிகர் அண்ணாமலை தான்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்