திமுக அரசில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று (மே 17) அளித்த தீர்ப்பை அடுத்து…. அமலாக்கத்துறை நடவடிக்கைகள் வேகம் எடுக்கக் கூடும் என்று வழக்கறிஞரும் மூத்த பத்திரிகையாளருமான தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு தராசு ஷ்யாம் அளித்த பேட்டியில்,
“அமலாக்கத் துறையை காட்டி மாநிலங்களை மிரட்டுகிறீர்கள் என்று சத்தீஸ்கர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இன்னொரு அமர்வு கூறுகிறது. அதேநேரம் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரித்த இன்னொரு அமர்வு, ‘இந்த வழக்கில் குற்றத்தினால் கிடைத்த பணம் என்பது சட்ட விரோத பணப் பரிமாற்றம் என்ற வகையிலே வரும். எனவே இதை அமலாக்கத்துறை விசாரிக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறது.
செந்தில்பாலாஜியைப் பொறுத்தவரை இது கடினமான காலகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வழக்கை தாண்டுவது என்பது அவருக்கு பிரம்மப் பிரயத்தனமாக இருக்கும்.,
செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பும். இரண்டு மூன்று முறை அவர் விசாரணைக்கு செல்வார். இரண்டு அல்லது மூன்று சம்மன்கள் அனுப்பி அவரிடம் பத்துமணி நேரம், பனிரெண்டு மணி நேரம் விசாரணை நடத்துவார்கள். அமலாக்கத்துறை விசாரணை டெல்லியில் நடக்கலாம். அப்படி நடந்தால் தேசிய ஊடகங்கள் அதற்கு மிகவும் முக்கியத்துவம் தரும். அதன் பின் அவர் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இது அரசியல் வழக்கா இல்லையா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், தற்போது அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை இப்படித்தான் விசாரணைக்கு அழைத்து கைது செய்தார்கள். அந்த வகையில் பார்க்கும்போது அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகும் சாத்தியம் இருக்கிறது. செந்தில்பாலாஜி கைதாக நேர்ந்தால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வரும். இதனால் திமுக அரசுக்கு சிக்கல் அதிகமாகிறது. ஒருவேளை கைது நடவடிக்கைக்கு முன் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டுமா என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுடைய முடிவு. அதில் நாம் எதுவும் சொல்ல முடியாது.
உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜி மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம். ஆனால் 99% மறு சீராய்வு மனுக்கள் மாற்றி அமைக்கப்பட்டதில்லை. இந்த வழக்கை மேலும் சில மாதம் இழுத்தடிக்க வேண்டுமானால் அது உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார் பத்திரிகையாளர் ஷ்யாம்.
நேர்காணல்: ஃபெலிக்ஸ்
தொகுப்பு: வேந்தன்
“பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை”: செந்தில் பாலாஜி
அரசாங்கம் கொடுக்குற 10 லட்சம் அப்பா கொடுக்குற 10 ரூபா மாதிரி வருமா?