அமைச்சர் செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை கஸ்டடி நாட்கள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜிக்கு ஐந்து நாட்கள் கஸ்டடி காவல் வழங்கினர். உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகிய அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.
உச்சநீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இன்றுடன் செந்தில் பாலாஜி கஸ்டடி முடிவடைய உள்ள நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே அவரது கஸ்டடி நாட்களை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
”புத்தகம் தூக்க வேண்டிய வயதில் கத்தியை தூக்கும் நிலை”- தமிழிசை கவலை!
“நாங்குநேரி மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்” – தங்கம் தென்னரசு