அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜூலை 4ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜூலை 7-ஆம் தேதி செந்தில் பாலாஜி தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இதனை தொடர்ந்து வழக்கை ஜூலை 11 க்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஒத்திவைத்தார்.
அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி தனது வாதத்தை முன்வைக்கும் போது, “காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் அமலாக்கத்துறைக்கு வழங்கப்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரமில்லை. செந்தில் பாலாஜி பணத்தை பெற்று வைத்ததற்கோ மறைத்ததற்கோ ஆதாரமில்லை.
குற்ற ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும். விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கைது செய்ய முடியாது. செந்தில் பாலாஜியிடம் எந்த ஆதாரமும் அமலாக்கத்துறை கைப்பற்றவில்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கபில் சிபல் தனது தரப்பு வாதத்தை முன்வைத்து வருகிறார்.
செல்வம்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ஐடி சோதனை!