மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று (ஜூன் 14) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பரதசக்கரவர்த்தி, நிஷா பானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “செந்தில் பாலாஜியை கைது செய்தபோது விதிமுறைகளை அமலாக்கத்துறை முறையாக பின்பற்றவில்லை.
இரவு 2 மணி வரை அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார். அவரது கைது தொடர்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
ரிமாண்ட் உத்தரவு சட்டவிரோதமாகவும் இயந்திரத்தனமாகவும் இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற ஆட்கொணர்வு மனுக்களை விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மருத்துவ பரிசோதனையில் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. பை பாஸ் சிகிச்சையை உடனடியாக நடத்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை ஏற்கவில்லை.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம். மதுரையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் வர வேண்டாம்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, “ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. உச்சநீதிமன்ற விதிகளை பின்பற்றி தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி ரிமாண்ட் செய்யப்பட்ட பிறகு இதுபோன்ற ஆட்கொணர்வு மனு செல்லுபடி ஆகாது.
செந்தில் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவையா என்பதை எய்ம்ஸ் மருத்துவ குழு பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “மருத்துவர்களின் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது. செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்துகொள்ள அனுமதியளிக்கிறோம்.
அமலாக்க பிரிவு நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் அவரை பரிசோதனை செய்யலாம். செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும்.
மருத்துவமனை சிகிச்சை காலத்தை நீதிமன்ற காவலுக்கான நாட்களாக கணக்கில் கொள்ளக் கூடாது. இந்த வழக்கு மீண்டும் ஜூன் 22-ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
செல்வம்
தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா ரயில்: ஐ.ஆர்.சி.டி.சி
தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு செந்தில்பாலாஜியின் துறைகள்: ஆளுநருக்கு பரிந்துரை!