அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.
அப்போது அவர் மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிக்கை, 3000 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பின்னர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு ஆகஸ்ட் 29ஆம் தேதி செந்தில் பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட காவலைச் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி ரவி, காவல் நீட்டிப்புக்குச் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் காணொளி வாயிலாக ஆஜரானால் போதுமானது என்றும் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி செந்தில் பாலாஜி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அல்லி ஜாமீன் மனு மீது 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதேசமயம் செந்தில் பாலாஜியின் காவலை செப்டம்பர் 29ஆம் தேதி வரை, அதாவது மேலும் 14 நாட்கள் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜி காணொளி காட்சி வாயிலாக ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
6ஆவது முறையாகச் செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
மேக்ஸ்வெல் குழந்தை பெயர் இதுதான்!
“நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என ED கேட்டது” : செந்தில் பாலாஜி தரப்பு!