எனது அமைச்சர்களை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக உத்தரவிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 30) எழுதிய கடிதத்தில், “29.6.2023 தேதியிட்ட கடிதம் ஒன்று மாலை 7 மணிக்கு கிடைத்தது. அதில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதே நாளில் இரவு 11.45 மணிக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு கடிதங்களும் புறக்கணிக்கப்பட வேண்டியவை என்றாலும் இந்த பிரச்சினையில் இருக்கக் கூடிய சட்டம் மற்றும் உண்மையை தெளிவுபடுத்த இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
முதலில் இந்த இரண்டு கடிதங்களுக்கும் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையை பெறவில்லை அல்லது வழங்கப்படவில்லை என்பதை பதிவு செய்கிறேன்.
இரண்டாவதாக,”அரசியலமைப்பு இயந்திரம் சிதைக்கப்பட்டது” என இல்லாத அச்சுறுத்தலை குறிப்பிட்டு, இவ்வளவு கடும் வார்த்தைகளைக் கொண்ட முதல் கடிதத்தை நீங்கள் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, “அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்பதற்காக” அதைத் திரும்பப் பெற்றுவிட்டீர்கள்.
இதுபோன்ற முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் சட்டக் கருத்தைக் கூட பெறவில்லை என்பதை இது காட்டுகிறது.
அதோடு மத்திய உள்துறை அமைச்சரின் தலையீடு, இந்த விவகாரத்தில் சட்டக் கருத்தைப் பெற உங்களை வழிநடத்தியது என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நீங்கள் அவசரப்பட்டுச் செயல்பட்டதையே காட்டுகிறது.
நானும், எனது அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மக்கள் நம்பிக்கையைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டோம். எங்களின் சொத்தே மக்களின் நம்பிக்கைதான்.
எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கையாளும் போது ஆளுநர் போன்ற உயர் அரசியலமைப்பு அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு தீர்ப்புகளையும் சட்ட விதிகளையும் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், “தகுதி நீக்கம் என்பது தண்டனை விதித்த பிறகுதான் செய்யமுடியும். உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் விசாரணைக்காக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் மற்றும் பிற தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் மவுனம் சாதித்து வருகிறீர்கள்.
குட்கா வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரியும் உங்களால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் மூலம் உங்களின் இரட்டை நிலைபாடு வெட்ட வெளிச்சமாகிறது.
சட்டப்பிரிவு 164(1)ன் கீழ், முதல்வரின் ஆலோசனையின் பேரில்தான் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கவோ அல்லது நீக்கவோ வேண்டும்.
ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் அல்லது சேர்க்கும் முடிவை பிரதமர் அல்லது முதல்வரின் அதிகாரத்துக்கு விட்டுவிடுவதாக உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது. அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அது முதலமைச்சரின் உரிமை.
ஒரு விசாரணை அமைப்பு ஒரு நபருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியதால், அவர் அமைச்சராக சட்டப்பூர்வமாக தொடரமுடியாது என்று இல்லை. எனது அமைச்சர்களை நீக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“விரும்பதகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக நீங்கள் குற்றச்சாட்டியது சரியானதல்ல. தமிழக அரசு உங்களுக்கும் உங்கள் அலுவலகத்துக்கும் உரிய மரியாதையை வழங்கி வருகிறது” என்றும் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
பிரியா
தொலைபேசியில் புதினை பாராட்டிய மோடி
பணி ஓய்வு: தாய்க்கு சல்யூட் அடித்த சைலேந்திர பாபு