“செந்தில் பாலாஜி சுயநினைவில் இல்லை”-சேகர்பாபு
அமலாக்கத்துறை விசாரணையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சுயநினைவில் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர் விசாரணை நடைபெற்ற போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவரை பார்ப்பதற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி, சேகர்பாபு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் , எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு , “அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவி ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி சுயநினைவில் இல்லை. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தி இருக்க வாய்ப்புள்ளது.
நான்கு ஐந்து முறை பெயர் சொல்லி அழைத்தபோதும் அவர் கண் திறந்து பார்க்கவில்லை. அவர் காது அருகே வீக்கம் உள்ளது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இசிஜி சீராக இல்லை . இந்த சலசலப்புக்கெல்லாம் திமுக அஞ்சாது.
இது போன்ற அடக்குமுறைக்கு எல்லாம் திமுக பயப்படாது. திமுக நெருப்பாற்றில் நீந்தி வந்த இயக்கம். இதை சட்டரீதியாக திமுக எதிர் கொள்ளும். எங்கள் தலைவர் தமிழக முதல்வர் திடமனதோடு இதை எதிர்கொள்வார்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்