அமலாக்கத்துறையால் 17 மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, இன்று (ஜூன் 14) அதிகாலை நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்ததும் இன்று அதிகாலை மருத்துவமனைக்கு அமைச்சர்கள் எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின், மா சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட திமுகவினர் குவிந்தனர். சட்ட அமைச்சர் ரகுபதியும் அங்கே வந்தார். செந்தில் பாலாஜிக்கு என்ன சிகிச்சை நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே அவர்களுக்கு சில நிமிடங்கள் ஆகின.
மூத்த வழக்கறிஞரும் திமுக எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் அவரை சார்ந்தவர்களிடம் அமலாக்க துறையால் தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஐ சி யு பிரிவில் இருக்கிறார்.
செய்தியாளர்கள் தான் செந்தில் பாலாஜி கைது என்கிறீர்கள். ஆனால் அவர் இதுவரை அமலாக்க துறையின் கஸ்டடியில் தான் இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டிருந்தால் முறையான தகவல்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படி தெரியப்படுத்தப்படவில்லை”என்றார்.
மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்” என்று தெரிவித்தார்.
-வேந்தன்
கிச்சன் கீர்த்தனா: கிரிஸ்பி ஸ்பிரிங் ரோல்