நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அன்றைய தினம் இரவு 11 மணி வரை சோதனை நடத்திய நிலையில் ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அப்போதே விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அமலாக்கதுறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
ஆனால் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் வரை பலரும் செந்தில் பாலாஜியை சென்று பார்த்த வண்ணம் இருந்தனர்.
ஒரு கைதியை முதல்வர், அமைச்சர்கள், முதல்வர் மருமகன் சபரீசன் என பலரும் வரிசை கட்டிக்கொண்டு ஏன் சென்று பார்க்க வேண்டும் என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. செந்தில் பாலாஜி வாய் திறந்தால் பலர் சிக்குவார்கள் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இதனிடையே செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் 15ஆம் தேதி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஜூன் 21 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார்.
தொடர்ந்து, ஜூலை 17ஆம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே செந்தில் பாலாஜி மனைவி மேகலா, தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ, கபில் சிபில் உள்ளிட்டோர் ஆஜராகி காரசார வாதங்களை முன்வைத்தனர். அமலாக்கத்துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
“செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது. அவரை விடுவிக்க வேண்டும்” என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.
“செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும். அவரது சிகிச்சையை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம்’ என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரிக்க தலைமை நீதிபதி பரிந்துரைத்தார்.
இந்த வழக்கை விசாரித்து ஜூலை 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி சி.வி. கார்த்திகேயன் “செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம். அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று தீர்ப்பு வழங்கினார்.
தனது தீர்ப்பில், ‘வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான்’ என்ற கருத்தை தெரிவித்தார் நீதிபதி கார்த்திகேயன்.
மூன்றாவது நீதிபதியின் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது.
உச்ச நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி சார்பாக, கபில் சிபில், முகுல் ரோத்தகி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.
அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா, “நாங்கள் ஆதாரம் இல்லாமல் கைது செய்யவில்லை. செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், “செந்தில் பாலாஜியை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம்” என்று நேற்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விசாரணை நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பதற்கான அனுமதியை அமலாக்க துறை பெற்றது.
இந்த அனுமதியை தொடர்ந்து புழல் சிறைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்தனர்.
இரவு 9 மணி அளவில் செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காரில் அழைத்துச் சென்றனர்.
ஜூன் 13ஆம் தேதி கைதாகி 53 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்திருக்கிறது.
செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக சட்ட ரீதியாக கடுமையாக போராடியது. செந்தில் பாலாஜிக்காக இந்தியாவிலேயே உச்சபட்சமாக சம்பளம் வாங்கும் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபில், முகுல் ரோத்தகி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
ஆனாலும் செந்தில் பாலாஜிக்கு சட்டரீதியாக பின்னடைவு ஏற்பட்டது. தற்போது அமலாக்கத்துறை பிடியில் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.
அவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றது முதல் பல்வேறு விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில் திமுகவில் சில முக்கியமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமலாக்கத்துறை தரப்பு கூறுகிறது.
செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் நிலையில், தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்படலாம் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பிரியா
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைவு: ஸ்டாலின் வருத்தம்!
ஆன்லைன் ரம்மி… திறமைக்கான விளையாட்டாக கருத முடியாது: தமிழக அரசு!
தற்போதைய தமிழக முதல்வர் தான் இந்த கரூர் செந்தில் குமார் பற்றிய கரூரில் சென்று குற்றம் சாட்டி தேர்தலில் பேசியவாய் இன்று வேறு மாதிரி பேசுகிறது இதற்கு தான் நாக்கிற்கு நிலைத் தன்மை இல்லை என்று கூறுவர்.எப்படி பார்த்தாலும் முறைகேடாக செயல்பட்ட செந்தில் குமார் தண்டிக்கப்பட வேண்டும்.தற்போது தவறான நபருக்கு துணை போன தமிழக முதல்வர் முதல் அனைவரும் குற்றவாளிகளே
செந்தில் பாலாஜி அவர்கள் ஊழல் செய்யப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டால் அது அதிமுக கட்சி ஆட்சியில் இருந்த பொழுது தானே……
அதன்படி பார்த்தால் திமுகவிற்கு எப்படி பாதிப்பு வரும் அதிமுக கட்சிக்கு தானே அவமானம்