வைஃபை ஆன் செய்ததும் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பு பற்றிய விவரங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை படித்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான, வேலைக்கு பணம் பெற்றதான மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் மே 16ஆம் தேதி அளித்திருக்கும் தீர்ப்பு தமிழ்நாடு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
பல்வேறு சட்ட படிநிலைகளைக் கடந்த இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர்.
செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அதுவும் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் எதிர்காலத்தில் இந்த வழக்கு விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என்று உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடர்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த தீர்ப்பு திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்றிருந்த எடப்பாடி பழனிச்சாமி அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு இந்த தீர்ப்பு பற்றிய தகவல் தெரிவிக்கப்பட, செய்தியாளர் சந்திப்பிலும் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி வாசித்தார். இந்த தீர்ப்பை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடரும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதற்கு இடையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு நெருக்கமான சட்ட வட்டாரங்களில் ஆலோசனை நடத்தி இருக்கிறார் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கு நடந்த நிலையில்… ஒரு நீதிபதி தங்களுக்கு சாதகமாகவும் இன்னொரு நீதிபதி தங்களுக்கு எதிராகவும் தீர்ப்பளிக்கலாம் என்ற யூக எதிர்பார்ப்பு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வட்டாரங்களில் இருந்து செந்தில் பாலாஜி தரப்புக்கு கிடைத்திருந்தது.
இதன் அடிப்படையில் இரு வேறு நீதிபதிகள் இரு வேறு கருத்துக்களை கொண்ட தீர்ப்பை அளித்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்வது என்ற ஆலோசனையில் தான் செந்தில் பாலாஜி தரப்பினர் இருந்தனர். ஆனால் இன்று இரு நீதிபதிகளும் ஒரே கருத்தின் அடிப்படையில் தீர்ப்பு அளித்ததால் செந்தில் பாலாஜி தரப்புக்கு சற்று அதிர்ச்சி அதிகமாக தான் இருந்திருக்கிறது.
உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுவிட்ட நிலையில் சட்டப்படி விசாரணையை தொடங்கியாக வேண்டிய கட்டாயம் இருப்பதாக முதல்வருக்கு சட்டரீதியான ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. செந்தில் பாலாஜி தரப்பில் முதல்வரிடம், ‘இந்த வழக்கில் எந்த அமைப்பு விசாரணை நடத்தினாலும் செந்தில் பாலாஜி குற்றம் அற்றவர் என்றுதான் தெரியவரும். அதனால் அரசுக்கு எவ்வித சட்ட நெருக்கடியும் ஏற்படாது’ என்று கூறப்பட்டிருக்கிறது.
திமுக உயர்மட்ட வட்டாரங்களில் இது குறித்து கேட்டபோது, ’அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதே நேரம் திமுக அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது.
பாஜகவை தேசிய அளவில் தொடர்ந்து எதிர்த்து வரும் திமுக அமைச்சர்களுக்கு எதிராக இனி அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் வேகமாக செயல்படலாம். ஆனால் அதை நாங்கள் எதிர்கொள்வோம்’ என்கிறார்கள்.
எதிர்க்கட்சியான அதிமுக பாஜக ஆகியோர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கும் நிலையில்… செந்தில் பாலாஜியின் சக அமைச்சர்கள் மற்றும் திமுக மாவட்ட செயலாளர்கள் இந்த தீர்ப்பை உள்ளுக்குள் ரசிக்கின்றனர்.
திமுகவுக்கு வந்து குறுகிய காலத்தில் மிக வலுவான துறைகளைப் பெற்று தங்களை விட முதலமைச்சரிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படி ஒரு சட்ட நெருக்கடி ஏற்பட்டிருப்பதைப் பற்றி, அவர்கள் வெளியில் வருத்தமாக பேசிக் கொண்டாலும் உள்ளுக்குள் ரசித்து வரவேற்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
கள்ளச்சாராய வழக்கு: முக்கிய சப்ளையரை கைகாட்டிய மரூர் ராஜா
16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!