இரவு வரை தொடரும் ED ஆபரேஷன்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதா?

Published On:

| By Selvam

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லம், கரூர் மண்மங்கலம் அருகே ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு, ராமகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள அமைச்சரின் சகோதரர் அசோக் குமார் வீடு ஆகிய இடங்களில் இன்று (ஜூன் 13) காலை 8 மணியளவில் அமலாக்கத்துறை சோதனையை தொடங்கினர்.

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இந்த விசாரணையை நடத்தி வருகிறது.

கடந்த முறை வருமான வரித்துறை சோதனையின் போது ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக இந்த முறை மத்திய தொழில் பாதுகாப்பு படையின் உதவியுடன் சோதனையை தொடங்கினர்.

காலையில் வாக்கிங் சென்ற செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சோதனை குறித்து நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் டாக்ஸி பிடித்து தனது வீட்டிற்கு அவசர அவசரமாக சென்றார்.

கிரீன்வேஸ் இல்லம் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி “வருமான வரித்துறையை தொடர்ந்து அமலாக்கத்துறை வந்திருக்கிறது. நான் வாக்கிங் சென்ற போது அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். இதனால் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் பாதியிலேயே டாக்ஸி பிடித்து வந்துள்ளேன்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் உள்ளே இருக்கிறார்கள். நான் உள்ளே செல்லவில்லை என்றால் தவறாகிவிடும். சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சோதனை முடிவதற்குள் எதுவும் சொல்ல முடியாது” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

செந்தில் பாலாஜி இல்லத்தை தொடர்ந்து மதியம் 1.40 மணியளவில் தலைமை செயலகத்திற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலாவது தளத்தில் உள்ள செந்தில் பாலாஜி அறையிலும் சோதனையிட்டனர்.

2016-ஆம் ஆண்டு அப்போது தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன் ராவின் அறையில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதன்பிறகு தற்போது அமலாக்கத்துறை தலைமை செயலகத்திற்குள் நுழைந்தது ரெய்டின் பரபரப்பை கூட்டியது.

கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது திமுக ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு குவிந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் உடமைகளை சோதனையிட்டதுடன் அவர்களது கார்களை சேதப்படுத்தினர்.

ஆனால் சென்னையில் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது திமுகவினர் பெரிய அளவில் வரவில்லை. இதனால் தனது சொந்த மாவட்டத்தில் செந்தில் பாலாஜிக்கு இருந்த செல்வாக்கு சென்னையில் இல்லையா என்ற கேள்வி எழுந்தது. கடந்த முறை ஐடி ரெய்டின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போன்று இந்த முறை எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த திமுக தலைமை அக்கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு செந்தில் பாலாஜி இல்லத்திற்கு தொண்டர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று உத்தரவு போட்டது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்ட சில திமுக வழக்கறிஞர்கள் மட்டுமே பிற்பகல் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு சென்றனர்.

செந்தில் பாலாஜியை சந்திக்க அவரது இல்லத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் செந்தில் பாலாஜியை வெளியே அனுப்புங்கள் அவரிடம் நாங்கள் பேச வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். 10 நிமிடங்கள் பொறுங்கள் இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற அதிகாரிகள் 45 நிமிடங்கள் ஆகியும் எந்த தகவலும் கொடுக்கவில்லை. இதனால் செந்தில் பாலாஜி இல்லத்திற்கு வெளியே காத்திருந்த ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் பதில் அளிக்க முடியவில்லை. அதிமுக, பாஜக கூட்டணியில் இரண்டு நாட்களாக குழப்பம் நீடித்து வருகிறது. இதனை திசை திருப்பவே செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

மனித உரிமையை மீறக்கூடிய வகையில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி அமைச்சர் என்பதையெல்லாம் தாண்டி ஒரு மனிதர். அவருடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பேசினார்.

இந்தசூழலில் செந்தில் பாலாஜி இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியாக அச்சுறுத்த பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது என்று தெரிவித்திருந்தார்.

காலை 8 மணிக்கு செந்தில் பாலாஜி இல்லத்தில் துவங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 10 மணியை கடந்து 14 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிக்கார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

14 மணி நேரத்திற்கும் அதிகமாக தொடர்வது சோதனையா அல்லது விசாரணையா என்ற பதட்டம் திமுக மேல் மட்ட புள்ளிகளிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறையின் பிடியில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்வார்கள் என்றும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்வார்கள் என்றும் வெவ்வேறு தகவல்கள் வந்துகொண்டுள்ளன.

இதற்கெல்லாம் பதில் செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே வரும்போது தான் தெரியும். ஜூன் 13 இரவு 10.15 மணி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து வெளியே வரவில்லை.

செல்வம்

’கொடி பறக்குற காலம் வந்தாச்சு’: மாமன்னன் லிரிக்கல் வீடியோ!

அமலாக்கத்துறை சோதனை: மம்தா கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel