போட்டி போட்டுப் பாத்துடுவோமா? ஐ.டி.விங் கூட்டத்தில் செந்தில்பாலாஜி போட்ட போடு!

Published On:

| By Aara

திமுக ஐடி விங்கின் மண்டல  ஆய்வுக் கூட்டம் தமிழகம் முழுதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை மண்டல ஐடி விங் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 27 ஆம் தேதி நடந்திருக்கிறது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஐ.டி.விங் மாநில செயலாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி,  ஐ.டி.விங் மாநில இணைச் செயலாளர் டாக்டர் ஆர். மகேந்திரன், ஐ.டி.விங் மாநில ஆலோசகர் கோவி. லெனின், கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர்  தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் மற்றும் ஐ.டி.விங் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த நிகழ்வில் பேசும்போது,

‘”கோவை மண்டலத்துக்கு  உட்பட்டு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் இருக்கின்றன. நமக்குள் ஒரு போட்டி வச்சிக்கலாமா? வருகிற சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் இருக்கும் 10 சட்டமன்றத் தொகுதிகளையும் நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்.

அதேபோல உங்கள் மாவட்டங்களில் இருக்கும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் நீங்கள் ஜெயித்துக் காட்டுகிறீர்களா? பந்தயம் வைத்துக் கொள்ளலாமா?” என்று மேடையில் அமர்ந்திருக்கும் மாவட்டச் செயலாளர்களைப் பார்த்துக் கேட்க, கூட்டத்தில் இருந்து ஆரவாரம் கிளம்பியது.

உடனே மேடையில் அமர்ந்திருந்த இந்த மண்டலத்துக்கு உட்பட்ட மற்ற மாவட்டச் செயலாளர்கள், ‘நாங்களும் போட்டிக்கு ரெடி.  எங்கள்  மாவட்டத்தில் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்றுக் காட்டுவோம்’ என்று எழுந்து சொல்ல, கூட்டத்தில் மேலும் கரகோஷம் அதிகரித்தது.

இவ்வாறு செந்தில்பாலாஜி கோவை மண்டலத்துக்கு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கினார்.

கூட்டத்தில் பேசிய ஐ.டி. விங் நிர்வாகிகள்,  “கோவையில்  பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கடும் நெருக்கடியை பாஜக கொடுத்து அவரை கைது செய்து ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் வைத்தது. செந்தில்பாலாஜி சிறையில் இருந்த கேப்பை பயன்படுத்தி அண்ணாமலை இங்கே வந்து கொஞ்சம் ஆட்டம் காண்பித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதிக்கு பொறுப்பு அமைச்சராக டி.ஆர்.பி. ராஜாவை அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்.  அதன்படியே கோவையில் முகாமிட்டு செயல்பட்டு தேர்தல் முடிவில், சொன்னபடியே மட்டன்  பிரியாணி போட்டுவிட்டு கிளம்பிவிட்டார் டி.ஆர்.பி.ராஜா. இப்போது கோவையில் பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜியோடு ஐ.டி.விங் அணியினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் சட்டமன்றத்தில் இரட்டை வேகத்தோடு  செயல்படுவோம்” என்றனர்.

ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்ல சிவம் பேசும்போது,

“ஐ.டி. விங் உண்மையிலேயே இந்த காலகட்டத்துக்கு ஏற்ற தேர்தல் பிரச்சாரத்துக்கும் நம் கட்சியின் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தருவதற்கும் பெரும் பலமாக இருக்கிறது.

நாம் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றோம். ஆனால் அதே அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நாம் சொல்லி வருகிறோம்.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. இதை பிரித்துப் பார்க்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறுவோமா என்றால் அது  உறுதி கிடையாது. ஏனென்றால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் கேள்வி கேட்கும் இடத்தில் இருந்தோம். அதிமுக அரசை எதிர்த்து வலிமையான கேள்விகளை கேட்டோம்.

ஆனால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் பதில் சொல்லும் இடத்தில் இருக்கிறோம். எதிர்க்கட்சிகளின், மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதனால் தேர்தல் வேலைகளை இன்னும் கவனமாக தீவிரமாக பார்க்க வேண்டும்” என்று பேசினார். நல்ல சிவத்தின் பேச்சை பலரும் உன்னிப்பாக கவனித்தனர். பேசி முடித்த பின் தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்து, ‘கரெக்டாக சொன்னீங்கண்ணா’ என்றும் கூறினர்.

திமுக இளைஞரணி மாநில துணை செயலாளரும், ஈரோடு மக்களவை எம்பியுமான பிரகாஷ் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசும்போது, “திமுகவிலேயே ஆக்டிவாக இயங்குகிற போட்டி போட்டுக் கொண்டு இயங்குகிற அணிகள் என்றால் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இயங்குகிற அணிகள் என்றால் இளைஞரணியும், ஐடி விங்கும்தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது எனக்கு பிரச்சாரம் உள்ளிட்ட உதவிகள் செய்ததில் ஐ.டி.விங்கின் பங்கு பெரும் பங்கு. அதற்காக இங்கே நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞரணி நிர்வாகிகளுக்கே இப்போது மாவட்டம் தோறும் சமூக தளப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம்.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு மணி நேரமாவது போனிலேயேதான் இருக்கிறோம். அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்த கட்சிக்காக பயன்படுத்த காலையில் 15 நிமிடம்,  மதியம் 15 நிமிடம்,  மாலை 15 நிமிடம் ஒதுக்கிப் பாருங்கள். இந்த நேரங்களில் கட்சி வேலைகளை மட்டும் பாருங்கள்.

நமது எதிரிகள் பொய்களை உண்மைகளாக்க சமூக தளம் மூலமாக முயற்சிக்கிறார்கள். நாம் உண்மைகளை, நமது அரசின் சாதனைகளை வலிமையாக மக்களிடம் எடுத்துச் செல்வோம்.

திறமையானவர்களை நமது தலைவர் எப்படியும் அடையாளம் கண்டு பதவி வழங்கிடுவார். எங்கள் மாவட்டத்தில் பெருந்துறையில் ஒரு பெண் தனி நபராக  50 ஆயிரம் ஃபாலோயர்கள் வைத்திருந்தார். நமது சிந்தனைகளை பரப்பி வந்த அந்த பெண்ணை இப்போது தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகியாக நியமித்திருக்கிறோம்” என்று கூறினார்.

ஐ.டி.விங் மாநில செயலாளரான அமைச்சர்  டி.ஆர்.பி. ராஜா  பேசும்போது, “ஐடி விங் பற்றி இங்கே பேசிய பலரும் தங்களுக்கும், கட்சிக்கும் எவ்வாறு ஐ.டி.விங் உறுதுணையாக இருந்தது, இருக்கிறது என்றெல்லாம் சொன்னார்கள். இதே வேகத்தோடு இதே உணர்வோடு தொடர்ந்து செயல்படுவோம். இங்கே பிரகாஷ் எம்பி பேசினார். இளைஞரணியிடமே நாங்கள் பாராட்டு வாங்கிவிட்டோம்.

எனக்கு மாவட்டச் செயலாளர்களிடம் ஒரே ஒரு கோரிக்கைதான் இருக்கிறது. மாவட்ட ரீதியாக ஐ.டி.விங் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்போது நாங்கள் கொடுக்கும் பட்டியலை பரிசீலித்துப் பாருங்கள். 10 பேர் நியமிக்க வேண்டுமானால் நாங்கள் 30 பேர் கொண்ட பட்டியலைக் கூட தருகிறோம். அதிலிருந்து நீங்களே கூட பத்து பேரை செலக்ட் செய்து தாருங்கள். இப்படி தகுதி நிறைந்தவர்கள் நியமிக்கப்பட்டால் இன்னமும் ஆக்டிவ்வான, இன்னமும் விறுவிறுப்பான பணிகளை ஐ.டிவிங் தொடர்ந்து முன்னெடுக்கும். இதற்கு மாவட்டச் செயலாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்”  என்று கூறினார்.

டி.ஆர்.பி.ராஜாவின் பேச்சை ஐ.டி.விங் நிர்வாகிகள் பெரிதும் வரவேற்றனர். காரணம் மாவட்டச் செயலாளர்களுக்கு சில விஷயங்களை சொல்லாமல் சொல்லிவிட்டார் ராஜா என்பதால்தான். இதுகுறித்து அந்த நிகழ்விலேயே,  “ஐ.டி.விங் மாவட்ட நிர்வாகிகளாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தங்களது டிரைவர்கள், பி.ஏ.க்கள், உறவினர்கள் இப்படியானவர்களைதான் சிபாரிசு செய்கிறார்கள்.  சில மாவட்டங்களில் இப்படியும் நடந்திருக்கிறது.

அப்படிப்பட்டப்பட்ட  தகுதியற்றவர்களுக்கு பதிலாக.  ஐடி.விங்கின் மாநில தலைமை கொடுக்கும் தகுதியானவர்களின் பட்டியலில் இருந்து மாசெ.க்களே நியமித்தால் ஐ.டி.விங்கின் பணி இன்னமும் நன்றாக இருக்கும் என்பதைத்தான் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு புரியும் வகையில் பேசியிருக்கிறார் ராஜா” என்கிறார்கள் ஐ.டி.விங் நிர்வாகிகள்.

செந்தில்பாலாஜியின் பந்தயம் கட்டும் பேச்சு திமுக மாவட்டச் செயலாளர்களிடையே மட்டுமல்ல… ஐ.டி,விங் நிர்வாகிகளிடையிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் கோவை திமுக நிர்வாகிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-வேந்தன்

அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தினமும் 10 முட்டை கொடுத்தாரா ஞானசேகர்?

“அதிமுக ஆட்சியில் எப்.ஐ.ஆரை மாற்றி எழுதினர்” : கனிமொழி குற்றச்சாட்டு!

‘ என் அப்பா இறந்தப்போ, காங்கிரஸ் கட்சி நடந்து கொண்ட விதம் ‘ – பிரணாப் மகள் ஆதங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share