செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து இன்று (நவம்பர் 17) மாலைக்குள் மருத்துவ அறிவிப்பு வெளியாகும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Senthil Balaji health condition update
கடந்த ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு ஜூன் 21ஆம் தேதி இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து ஜூலை 17ஆம் தேதி வரை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் அங்கிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியவில்லை என்றும் கால் அடிக்கடி மறத்துப்போவதாகவும் செந்தில் பாலாஜி கூறி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவைப்படுகிறது என்று பரிந்துரைத்தார்.
இதனால் செந்தில் பாலாஜி அன்று மாலையே ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரை இதயவியல், நுரையீரல், நரம்பியல் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.
அவருக்கு மீண்டும் ஆஞ்சியோ செய்யப்பட இருப்பதாகவும், பித்தப்பையில் கல் இருப்பதால் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், அவருக்கு பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதோடு தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படுகிற சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்த தகவல்கள் வெளிவரும். அதுவரை எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார். Senthil Balaji health condition update
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மத்திய ஆட்சியாளர்களால் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து: ஸ்டாலின்