வேலை வாங்கித் தருவதாக பணமோசடி : புகார் முதல் தீர்ப்பு வரை -செந்தில் பாலாஜி வழக்கின் டைம்லைன்!

அரசியல்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஜாமீன் பெற்றுள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதையை இந்த செய்திக்குறிப்பில் பார்க்கலாம்…

நவம்பர் 2014
அப்போதைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 746 ஓட்டுநர் , 619 நடத்துனர், 261 ஜூனியர் இன்ஜினியர், 40 உதவிப் பொறியாளர் பணிகளுக்கு நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவித்தது.

அக்டோபர் 29- 2015
தேவசகாயம் என்பவர் தனது மகனுக்கு நடத்துனர் வேலை பெற்றுத்தர பழனி என்ற நடத்துநரிடம் 2.6 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதையடுத்து ஐபிசி சட்டப்பிரிவு 406, 420ன் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

மார்ச் 7 -2016
கோபி  என்ற மற்றொரு புகார்தாரர் சென்னை காவல் ஆணையரிடம் ஒரு மனு அளித்தார். அதில், “தான் நடத்துநர் பதவிக்கு விண்ணப்பித்து, நேர்காணலுக்கு பிறகு செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோகனும், மைத்துனர் கார்த்திக்கும் வேலை கொடுக்க லஞ்சம் கேட்டனர். அதன்படி 2.4 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால்  எனக்கு வேலை கிடைக்கவில்லை”  என்று தெரிவித்திருந்தார்.

மே 2016
செந்தில் பாலாஜிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கோபி மனு தாக்கல் செய்தார். வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது தொடர்பாக போலீஸிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஜூன் 2016
கோபியின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், “ஏற்கனவே தேவசகாயம் அளித்த புகாரின் பேரில் போலீஸ் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இதில் கோபி அளித்த புகாரின் பேரில் இதே விவகாரத்தில் மற்றொரு எப்.ஐ.ஆர் பதிவு செய்ய அவசியமில்லை. இதேபோல 81 பேர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் விசாரிக்க வேண்டும், அதை துணை ஆணையர் கண்காணிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.

ஜூன் 13 2017
2015 ஜனவரி முதல் மார்ச் வரையில் செந்தில் பாலாஜிக்கு 2 கோடிக்கும் மேல் கொடுக்கப்பட்டதாக 2 பேர் மீது மட்டும் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி பெயரோ அவரது சகோதரர் பெயரோ இடம்பெறவில்லை.

செப்டம்பர் 9 2017
வி.கணேஷ் குமார் என்பவர் செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகாரில், “நானும் போக்குவரத்து துறை ஊழியர்தான். என்னுடைய சக ஊழியரான அன்னராஜ் மற்றும் அவருடைய நண்பர் சகாயராஜன் இருவரையும், செந்தில் பாலாஜியின் உறவினரான பிரபு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர்களிடம் ஓட்டுநர், நடத்துநர் பணியில் சேர விரும்புவர்களிடம் பணம் வசூலிக்குமாறு செந்தில் பாலாஜி கூறினார். டிசம்பர் 2014 முதல் ஜனவரி 2015 வரை 95 லட்சம் ரூபாய் வரை வசூலித்து கொடுக்கப்பட்டது. ஆனால் பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கவில்லை. இதனால் காசு கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

ஜூன் 7 2018
கணேஷ் குமார் புகாரின் பேரில், 406, 420 மற்றும் 506(1) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 13, 2018
செந்தில் பாலாஜி மீது மற்றொரு நபரான கே.அருள்மணி புகார் கொடுத்தார். வேலைவாங்கித் தருவதாக பலரிடம் 40 லட்சம் ரூபாய் வரை வசூலித்து செந்தில் பாலாஜியின் பிஏ சண்முகத்திடம் கொடுத்தேன். அப்போது செந்தில்பாலாஜியும், அசோகனும் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று உறுதியளித்தார்கள். ஆனால் வேலையும் கிடைக்கவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 12, 2019
அருள்மணி அளித்த புகாரின் பேரிலும் அதே சட்டப்பிரிவுகளின் கீழ் மீண்டும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போது வரை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

நவம்பர் 27, 2019
தேவசகாயம் அளித்த புகாரில் பதிவு செய்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி, 6 வாரத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 26, 2020
2017ஆம் ஆண்டு போக்குவரத்து ஊழியர் கணேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜூன் 16, 2021
திமுக ஆட்சி அமைந்த பிறகு செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை கொடுக்கப்பட்டது. அப்போது, சிறப்பு நீதிமன்றம் தன்னை விடுவிக்க மறுத்ததை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதேசமயம், மத்திய குற்றப்பிரிவு போலீசார், முதல் புகார்தாரர் தேவசகாயம் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்த வழக்கில் விசாரணையை முடித்திருந்தனர். செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோகன், பிஏ சண்முகம் என 46 பேரை குற்றப்பத்திரிகையில் சேர்த்திருந்தனர். இந்தமுறை ஊழல் தடுப்புச் சட்டத்தையும் போலீசார் சேர்த்தனர்.

ஜூலை 30, 2021
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களுக்கு இடையே சமரசம் எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த எப்.ஐ.ஆரை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. புகார்தாரர் அருள்மணி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஆகஸ்ட் 26, 2021
முதல் புகார்தாரர் தேவசகாயகம், வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் மீண்டும் புதிய விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

செப்டம்பர் 1, 2022
இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்குகளில் ஒன்று ஜூலை 30, 2021 ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி ED சம்மனை நீதிமன்றம் ரத்து செய்தது.

செப்டம்பர் 8 2022
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை சம்மனை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்தது.

அக்டோபர் 31, 2022
தேவசகாயம் தாக்கல் செய்த வழக்கில், புதிய விசாரணையை தொடங்க போலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்ற்ம் உத்தரவிட்டது.

மார்ச் 16, 2023
செந்தில் பாலாஜி மீதான வழக்கை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஜூன் 13 2023
செந்தில் பாலாஜி தொடர்புடைய  பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

ஜூன் 14, 2023
அமலாக்கத் துறையின் சோதனை நள்ளிரவு வரை நீடித்த நிலையில் ஜூன் 14 அதிகாலை 1.30 மணியளவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினம் காலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களும் செந்தில் பாலாஜியிடம் நலம் விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதியே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கே வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்து உத்தரவிட்டார்.

ஜூன் 15, 2023
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவிரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அன்றைய தினமே அவர் காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஜூன் 16 2023
செந்தில் பாலாஜியை 8 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அல்லி அனுமதி வழங்கினார். மருத்துவமனையில் வைத்து மருத்துவர்களின் அறிவுரையை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். விசாரணை முடிந்த பிறகு வீடியோ காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஜூன் 17 2023
காவிரி மருத்துவமனை அமலாக்கத் துறைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியது. செந்தில் பாலாஜி கிரிட்டிக்கலாக இருப்பதாகவும், மருத்துவக் கண்காணிப்பில் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என்றும் அதில் தெரிவித்திருந்தது.

ஜூன் 19, 2023
செந்தில் பாலாஜி காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகவும், மருத்துவமனையில் வைத்தே விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

ஜூன் 22, 2023
செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்றது.

ஜூலை 4 2023
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிஷா பானு, பரத சக்ரவர்த்தி இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று தெரிவித்த நிலையில், இதற்கு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார் பரத சக்ரவர்த்தி.

ஜூலை 5 2023
இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பு சென்றது.

ஜூலை 14, 2023
நீதிபதி கார்த்திகேயன் விசாரணையை முடித்து 143 பக்க தீர்ப்பை வழங்கினார். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்குட்பட்டவர்தான் என்றும், அவருடைய கைதும், நீதிமன்ற காவலும்சட்டப்பூர்வமானது என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி பரத சக்ரவர்த்தி அளித்த தீர்ப்பை உறுதி செய்தார்.

ஜூலை 17, 2023
காவிரி மருத்துவமனையில் இருந்து சென்னை, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி.

ஜூலை 18, 2023
அப்போதைய தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மீண்டும் இந்த வழக்கை இருநீதிபதிகள் அமர்வு விசாரிக்க நிர்வாக ஒப்புதலை வழங்கினார். அன்றைய தினமே, செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ஜூலை 26, 2023 அன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஜூலை 25, 2023
இந்தநிலையில் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை காவல் குறித்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு தெரிவித்தது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தசூழலில் ஜாமீன் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறி மாறி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. நீதிமன்றக் காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 8 2024
செந்தில்பாலாஜி மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 20 2024
இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

செப்டம்பர் 26 2024
15 மாதங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

வாரம்தோறும் திங்கள், வெள்ளி கிழமைகளில் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை கலைக்கக் கூடாது. சாட்சிகளை தொடர்பு கொள்ளக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

கல்யாணம் ஆன பிறகு எனக்கு வங்கி கணக்கு கூட இல்லை – ஷாவிடத்தில் ஜெயம் ரவி சொன்ன தகவல்!

செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தார்? – சீமான் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *