உச்சநீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை இன்று முதல் விசாரணை நடத்த உள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் செந்தில் பாலாஜியை இன்று முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை விசாரணை செய்யலாம் என்று அனுமதி வழங்கியது.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை விசாரணையில் எடுக்க அனுமதி கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி வழங்கினார்.
உச்சநீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று புழல் சிறைக்கு சென்றனர்.
பின்னர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக மத்திய காவல்துறை பாதுகாப்புடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில் இன்று முதல் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
செந்தில் பாலாஜியை கைது செய்த பின்பு ஒரு மாதத்திற்கும் மேலாக காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சி செய்து வந்தது. நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணையின் போது செந்தில் பாலாஜி இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: தமிழ்நாடு புதிய சாதனை!
“ஆட்சி மாறும் போது டெல்லி மசோதா திரும்ப பெறப்படும்” – கெஜ்ரிவால்