senthil balaji enforcement directorate case judges order

செந்தில் பாலாஜி வழக்கு முடித்து வைப்பு!

அரசியல்

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத் துறை கைது செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். அமலாக்கத் துறை தரப்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.

இவ்வழக்கில் கடந்த ஜூலை 4ஆம் தேதி நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

“செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதும் சட்டவிரோதம். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்“ என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கினார்.

“செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. மருத்துவ ரீதியாக செந்தில் பாலாஜி தகுதி பெற்றுவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அமலாக்கத் துறை அணுகி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரலாம்” என்று நீதிபதி பரத சக்ரவர்த்தி தீர்ப்பு வழங்கினார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பரிந்துரையின் படி மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்து கடந்த ஜூலை 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

“செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில்  எடுத்து விசாரிக்கலாம். இந்த விஷயத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்போடு நான் உடன்படுகிறேன்.

செந்தில்பாலாஜி உடல் நிலை கருதி மருத்துவமனையில் இருப்பதால், முதல் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் இல்லை என்று கூறியிருந்தாலும் கூட அமலாக்கத் துறையினர் குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியில்லை என்று கூறவில்லை. எனவே செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது.

செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை எப்போதில் இருந்து காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்படுகிறது” என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார்.

இந்த பரிந்துரையை ஏற்று இரு நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்திருந்தார்.

அதன்படி இன்று (ஜூலை 25) பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜரானார்கள்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ,  “இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முடியும் வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும்“ என்று வாதாடினார்.

அப்போது, நீதிபதி நிஷா பானு,  “நான் எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன். தற்போது இரு  தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த விஷயத்தில் நான் எதுவும் கூறப்போவதில்லை. இந்த வழக்கை நான் இனி விசாரிக்கவில்லை” என கூறினார்.

மேலும்,  “இந்த வழக்கில் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். வழக்கை முடித்து வைக்கிறோம்” என்றும் தெரிவித்தார் நிஷா பானு.

நீதிபதி பரத சக்ரவர்த்தி,  “இவ்வழக்கில் இரு தரப்பிலும்  உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன.  எனவே நாங்கள் எதுவும் கூற வேண்டியதில்லை” என்று கூறினார்.

அமலாக்கத் துறை காவல் குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யும் என்று கூறி செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்து  இரு நீதிபதிகளும் உத்தரவு பிறப்பித்தனர்.

பிரியா

ஆவின் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இராமநாதபுரம் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் ஸ்டாலின்

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *