செந்தில் பாலாஜி கேஸ் டைரி : புட்டு புட்டு வைத்த அண்ணாமலை

அரசியல்

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை நடவடிக்கையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது 2011-2014 காலக்கட்டத்தில் பெருநகர போக்குவரத்து கழகம் சார்பில் மெக்கானிக், கண்டக்டர் ஆகிய இரு பதவிகளுக்கான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் செந்தில் பாலாஜி மூன்று பேரோடு சேர்ந்து வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிபாரிசு செய்து வேலை கிடைத்திருக்கிறது என்பதுதான் இந்த வழக்கின் குற்றச்சாட்டு.

13.8.2018 அன்று மெக்கானிக், கண்டக்டர் வேலைக்காக அப்ளை செய்து வேலை கிடைக்காத அருள்மொழி புகார் கொடுக்கிறார். அதில் ஏ1 செந்தில்பாலாஜி, ஏ2 செந்தில் பாலாஜி சகோதரர் அசோக், ஏ3 செந்தில் பாலாஜியின் பிஏ சண்முகம், ஏ4 ராஜ்குமார் ஆகிய நான்கு பேர் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இவர்கள் நான்கு பேரும் எங்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு பெருநகர போக்குவரத்து கழகத்தில் வேலை கொடுப்பதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.


இந்த குற்றச்சாட்டை எடுத்துக்கொண்டு முழுவதுமாக விசாரணை செய்து, இந்த 4 பேருமே குற்றம் செய்ததாக போலீசார் சார்ஜ்சீட் போடுகிறார்கள்.

12.4.2019 அன்று எம்.பி., எம்.எல்.ஏக்களான நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை இவர்கள் நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இறுதி அறிக்கை கொடுக்கிறது.

இதையடுத்து 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜிக்கு இரண்டு இலாகா கிடைக்கிறது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் ஆகிறார்.

இந்நிலையில் ஏ4 சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் பெட்டிஷன் (cr op no: 13374/2021) தாக்கல் செய்தார். அதில் எங்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும், குற்றப்பத்திரிகையையும், இறுதி அறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


புகார்தாரர் அருள்மொழியோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட 13 பேர் ஒரு மனு தாக்கல் செய்கின்றனர். அதில், “நாங்கள் எம்டிசியில் (பெருநகர போக்குவரத்து கழகம் ) வேலை வேண்டும் என்று பணம் கொடுத்ததும் உண்மை, அவர்கள் வாங்கியதும் உண்மை. ஆனால் வாங்கின பணத்தை 2019ல் திருப்பி கொடுத்துவிட்டார்கள். அதனால் நாங்கள் இந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்” என்று சமரச மனு தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் 28.7.2021 அன்று சண்முகம் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தாக்கல் செய்த இரண்டு நாட்களில் 30.7.2021ல் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு வழங்குகிறது. சண்முகத்தின் மனுவை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.


லஞ்சம் பெறப்பட்ட ஒரு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களும், குற்றவாளிகளும் சேர்ந்து சமரச மனு போட்டு அதை உயர் நீதிமன்றம் ஏற்றிருப்பது ஆச்சயர்மாக இருக்கிறது என்று அப்போது இந்தியாவில் இருக்கக் கூடிய சட்ட வல்லுநர்கள் எல்லாம் பேசினார்கள்.

ஒரு அமைச்சர் மேல் தமிழக காவல்துறை விசாரணை செய்து தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை சமரச மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட தர்மராஜ் உச்ச நீதிமன்றத்துக்கு செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் நானும் ஒருவர். இவர்கள் நேர்மையாக தேர்வு நடத்தியிருந்தால் எனக்கு வேலை கிடைத்திருக்கும் என்று கூறுகிறார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் 8.9.2022ல் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும். இவர்கள் அனைவரும் அரசாங்க சம்பளத்தில் இருந்தவர்கள். அதனால் பணத்தை வாங்கினேன், பணத்தை கொடுத்தேன் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது.

அப்போது இந்த விவகாரத்தில் கண்டனம் மட்டும் தெரிவிக்க முடியாது, இன்னும் அதிகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. கண்டிப்பாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தது.

மேலும் இறுதியான குற்றப்பத்திரிகையில் ஊழல் தடுப்பு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதை ஏன் போடவில்லை. மீண்டும் விசாரணை செய்து ஊழல் தடுப்பு சட்டத்தை தமிழக காவல்துறை போடுங்கள் எனவும் 8.9.2022ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பிறகு செந்தில் பாலாஜிக்கும், சண்முகத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜியை முதல் குற்றவாளியாகவும், சண்முகத்தை மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்த்துவிட்டனர் என்று வாதத்தை முன்வைக்கின்றனர்.

இதற்கு உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பணம் கொடுத்தவர்களுக்கு எல்லாம் வேலை வந்துவிட்டதா என தினசரி செக் செய்கிறார்கள். செந்தில் பாலாஜி அதிகாரப்பூர்வ ஐடியை சண்முகம் கையாண்டிருக்கிறார். அதில் இருந்து ஒவ்வொரு எம்டிசி கழக எம்.டிக்கும் கூட மெயில் அனுப்பியிருக்கிறார்கள். அதில் சிலரது பெயரும் அனுப்பியிருக்கிறார்கள். அந்த பெயர்களில் பணம் கொடுத்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். செந்தில் பாலாஜியின் ஐடியை பயன்படுத்தியதன் அடிப்படையில் அவர் பிஏ சண்முகம்தான் என்பது உறுதியாகிறது. எனவே, குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ஆர்டர் கூட சரி என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


இதெல்லாம் முடிந்து முதல்வரின் கீழ் இருக்கும் உள்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு வீக் அஃபிடவிட் போட்டு செந்தில் பாலாஜியை தப்பிக்க வைக்க முயற்சி நடந்தது.

இந்தசூழலில் தான் நாங்கள் சொல்லியும் மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. எனவே ஊழல் தடுப்புச் சட்டத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றமே சிறப்பு விசாரணை குழு அமைக்கும் என்று சொல்லியது.

2018ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது அயல்நாடுகளில் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை செய்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஹார்டு டிஸ்க்கில் மொரிசியஸ் உள்ளிட்ட நாடுகளில் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக காவல் துறை குறிப்பிட்டதை தொடர்ந்து, பணமோசடி வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை செய்கிறது.

இதில், உயர் நீதிமன்றத்தில் சண்முகம் மனு போடும்போதே அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை வாங்கிவிட்டனர். இந்த தடையை உச்ச நீதிமன்றம் 8.9.2022ல் நீக்கியது.

தொடர்ந்து மூன்று வாரத்துக்கு முன்பு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில், அமலாக்கத் துறை பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நேற்று தலைமை செயலகத்தில் செந்தில் பாலாஜியின் அறை உட்பட பல இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியிருக்கிறது. இதில் எங்கிருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அமலாக்கத் துறை தனது கடமையை செய்திருக்கிறது” என்று விளக்கினார் அண்ணாமலை.
பிரியா

+1
1
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *