உதயநிதி ஸ்டாலின் பவுண்டேஷன் வங்கி கணக்கை அமலாக்கத்துறை முடக்கியது குறித்து சட்டப்படி எதிர்கொள்வோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று (மே 27) கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை, கரூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் வகையில், குளித்தலையில் கலைஞருக்கு சிலை திறப்பது,
100 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது, 100 இடங்களில் பிரம்மாண்டமாக கூட்டங்கள், கவியரங்கங்கள், பட்டிமன்றம் உட்பட நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று மாலை கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில காலங்களில் நடைபெற உள்ளதால் வருமான வரித்துறை சோதனைகளை முன்னெடுக்கிறார்கள்.
சோதனை நடக்கும் இடங்களில் உள்ளவர்கள் யாரும் வரி ஏய்ப்பு செய்யவில்லை. அவர்கள் முறையாக வருமான வரி செலுத்தக்கூடியவர்கள். இருந்தாலும் அவர்கள் இந்த சோதனையை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வந்தபோது காவல்துறை பாதுகாப்புடன் வரவில்லை.
இதனால் அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் தானா என்ற ஐயப்பாடு நிலவியதனாலேயே விரும்பத்தகாத அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிட்டது.
இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் சோதனை நிறைவு பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆயிரம் சோதனைகள் நடந்தாலும் 40 தொகுதிகளிலும் திமுக தான் வெல்லும்” என்றவரிடம் உதயநிதி பவுண்டேஷன் வங்கி கணக்கை அமலாக்கத்துறை முடக்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
“சட்டப்படி அதனை எதிர்கொள்வோம்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
செல்வம்