அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 7ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதைதொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
பி. எம். எல். ஏ. சட்ட விதி 45 ஆம் பிரிவின்படி செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்று கருத அடிப்படைகள் இல்லை என்ற முகாந்திரத்தில் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனிடையே 6ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இன்று செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
7 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
ஆசிய போட்டிகள்: பதக்கங்களை குவிக்கும் இந்தியா