அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆகஸ்ட் 25) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஆகஸ்ட் 7-ஆம் தேதி அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.
5 நாட்கள் கஸ்டடி ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தது.
அமலாக்கத்துறை கோரிக்கையை நிராகரித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனிடையே செந்தில் பாலாஜி வழக்கை எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்பாக காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீட்டித்து அன்றைய தினம் அவரை நேரில் ஆஜர்படுத்த சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.
செல்வம்
எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு: அதிமுகவினர் கொண்டாட்டம்!
“எடப்பாடி தலைமையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது” – வழக்கறிஞர் இன்பதுரை