வைஃபை ஆன் செய்ததும் இன்பாக்சில் மாமன்னன் அப்டேட்டுகளாக வந்து விழுந்தன. அவற்றுக்கிடையே, ‘செந்தில்பாலாஜி விவகா ரத்தில் அமலாக்கத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?’ என்ற கேள்வி வந்து விழுந்தது.
அந்தக் கேள்விக்கு விரிவான பதிலை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம் ஒருபக்கம் அரசியல் ரீதியாகவும், இன்னொரு பக்கம் சட்ட ரீதியாகவும் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. செந்தில்பாலாஜி தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
செந்தில்பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகான ஓய்வில் இருக்கிறார். இதேநேரம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கிற்கு தொடர்ந்து சம்மன் அனுப்பியும் அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாததால், அவரையும் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது.
இப்படி வெளிப்படையான நிகழ்வுகள் என்றால் அமலாக்கத் துறை கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக… சென்னையின் சில முக்கியமான மருத்துவமனைகளில் அதிரடியான ரெய்டு நடவடிக்கைகளை சத்தமின்றி நடத்திக் கொண்டிருக்கிறது.
சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, ஐஜேகே கட்சியின் நிறுவனரான பாரிவேந்தர் குடும்பத்துக்கு சொந்தமான சிம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றில் சில நாட்களாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கணக்கு வழக்குகளை தீர விசாரித்திருக்கிறார்கள்.
அப்பல்லோ மருத்துவமனையின் குழும செயல் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கடந்த ஜூன் 10 ஆம் தேதி சென்னை வந்த அமித் ஷாவை சந்தித்துப் பேசியவர்களில் ஒருவர். பாரிவேந்தரோ திமுக எம்.பி.யாக இருந்தாலும் பாஜகவுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்து வருபவர். இப்படி இருவருமே பாஜகவோடு நெருங்கியவர்களாக இருக்கும் நிலையில் இவர்கள் தொடர்புடைய மருத்துவமனைகளில் அமலாக்கத் துறை ஏன் ரெய்டு நடத்த வேண்டும், அதுவும் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக? என்ற கேள்வி எழுகிறது.
இவர்கள் இருவரும் பாஜகவுடன் நல்ல தொடர்பு எல்லைக்குள் இருப்பதால்தான் அதிரடியோ அறிவிப்போ இல்லாமல் அமைதியாக இந்த சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அமலாக்கத்துறையினர்.
இந்த இரு மருத்துவமனைகளுக்கும் செந்தில்பாலாஜிக்கும் என்ன தொடர்பு, செந்தில்பாலாஜி விவகாரத்தில் இம்மருத்துவமனைகளில் ஏன் சோதனை நடத்த வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் கேட்டு விசாரித்ததில் பல தகவல்கள் கிடைத்தன.
அப்பல்லோ குழுமம் மருத்துவமனை தவிர பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளது. அவற்றில் ஒன்று அப்பல்லோ பவர் சிஸ்டம்ஸ். எலக்ட்ரிகல் கான்ட்ராக்டிங், சூரிய மின்சார உற்பத்தி போன்றவற்றில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
செந்தில்பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது மின்சார வாரியத்தில் இருந்து அப்பல்லோ பவர் சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கு பில் தொகைகள் செட்டில் செய்யப்பட வேண்டியிருந்திருக்கிறது.
அதைக் கேட்டபோது… அப்பல்லோ மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் நண்பர்கள் நடத்தும் மருந்து சப்ளை நிறுவனங்கள் மூலம் மருந்துகள் வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அசோக்கின் நண்பர்கள் நடத்தும் மருந்து சப்ளை நிறுவனத்திடம் அப்பல்லோ மருத்துவமனை மருந்து கொள்முதல் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருக்கிறது.
இது அமலாக்கத்துறையின் கவனத்துக்கு தெரியவந்ததும்… அந்த மருந்து சப்ளை நிறுவனத்துக்கும் அசோக், செந்தில்பாலாஜி ஆகியோருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தும்.. அந்த மருந்து சப்ளைக்கான பண பரிவர்த்தனைகள் குறித்தும் அமைதியாக ஆய்வு நடத்தியிருக்கிறது.
இதேபோல பாரிவேந்தர் குடும்பத்தினர் நடத்தும் சிம்ஸ் மருத்துவமனைக்கும் அசோக் தரப்பு நடத்தும் மருந்து சப்ளை நிறுவனத்துக்கும் இடையே வணிகப் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதனால் அங்கேயும் அமலாக்கத்துறை பணப் பரிவர்த்தனை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்திருக்கிறது. இந்த இரு மருத்துவமனைகளிலும் அமலாக்கத்துறை எவ்வித ஆரவாரமும், அறிவிப்பும் இன்றி அமைதியாக சோதனை நடத்தி தங்களுக்கு தேவையான ஆவணங்களைத் திரட்டியிருக்கிறது.
போக்குவரத்துக் கழக வேலைக்காக லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில்தான் இப்போது அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். அது தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு அரசின் மத்திய குற்றப்பிரிவும் தொடங்கியிருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஒரு வழக்கில் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆகியோர் சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றால் கூட வெவ்வேறு விவகாரங்களில் இவ்விருவரையும் சிக்க வைக்க அமலாக்கத்துறை தயாராகி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த மருந்து சப்ளை நிறுவனம் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் பற்றிய ஆவணச் சேகரிப்பும்.
விரைவில் அமலாக்கத்துறை இது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்கும் என்கிறார்கள் விசாரணை வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
உலகக்கோப்பை சாம்பியனுக்கு நேர்ந்த கதி!
”பல உண்மை சம்பவங்களின் தொகுப்பே மாமன்னன்”: பட்டியலிட்ட திருமாவளவன்
