அமலாக்கத் துறை பொய்யான தகவல்களை கூறியுள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்திலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் ஆஜரான பிறகு நீதிமன்ற வளாகத்தில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “செந்தில் பாலாஜியை நள்ளிரவில் அமலாக்கத் துறை சட்டவிரோதமாக கைது செய்தது. அந்த கைது நடவடிக்கைகளில் இந்திய அரசியலமைப்பு சரத்துகளும், குற்றவியல் நடைமுறை சரத்துகளும் மீறப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்கொணர்வு மனுவை செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இருந்து ஒரு நீதிபதி விலகிவிட்டதால், இன்று நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்ற காவலுக்கு செந்தில் பாலாஜி அனுப்பப்பட்டுவிட்டார். எனவே ஆட்கொணர்வு மனு நிலைக்கத்தக்கது அல்ல என்று வாதிட்டனர்.
ஆனால் 2022ல் உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்பில் கைது நடவடிக்கைகளிலும், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் போதும் சட்டவிரோதம் இருந்தால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும். அதை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது. இதை நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டினோம்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீதான அனைத்து பதில்களையும் அமலாக்கத் துறை வரும் 22ஆம் தேதி எடுத்து வைக்கலாம் என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். காவேரி மருத்துவமனையில் அனுமதித்து இதய அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிடுமாறு நாங்கள் கேட்டோம்.
இதற்கு அமலாக்கத் துறை கடுமையாக எதிர்த்தது. எய்ம்ஸில் இருந்து ஒரு சிறப்பு குழு அமைத்து செந்தில் பாலாஜியை பரிசோதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதை கேட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலிலேயே காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் கூட, எய்ம்ஸ் மருத்துவர்களோ அல்லது அமலாக்கத் துறை விரும்பும் மருத்துவர்களோ அங்கு அளிக்கப்படும் பரிசோதனை சரிதானா என உறுதி செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மருத்துவ சிகிச்சையை முறையாக நடக்கிறதா என சரிபார்த்துகொள்ளலாம்.
ஜாமீன் மனுவை பொறுத்தவரை, எய்ம்ஸ் மருத்துவ பரிசோதனை கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவில் உண்மைக்கு புறம்பான செய்திகளை அமலாக்கத் துறை துணை இயக்குநர் கூறியுள்ளார். ஒரு மனிதனின் நலனுக்கு எதிராக ஆவணங்களை உருவாக்கி, ஒரு பொது ஊழியர் தவறு செய்தார் என்றால் அது இந்திய தண்டனை சட்டப்படி தண்டிக்கத்தக்கது. எனவே செந்தில் பாலாஜி சார்பில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது குற்றவியல் நடைமுறை தொடங்க உரிய அனுமதி கேட்டோம். அதற்கான மனுவை தாக்கல் செய்யும் போது நீதிமன்றம் அதை அனுமதிக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஓமந்தூராரில் உரிய சிகிச்சை கிடைக்கும் என சொல்லும் அமலாக்கத்துறை ஓமந்தூரார் மருத்துவ அறிக்கையை ஏற்க மறுக்கிறது. இதிலிருந்து அமலாக்கத் துறை எப்படி நடந்துகொள்கிறது என்று புரிந்துகொள்ளலாம். இஎஸ்ஐ மருத்துவர்களும் செந்தில் பாலாஜிக்கு இருக்கும் பாதிப்பை உறுதி செய்துள்ளனர்” என்றார்.
பிரியா
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு!
கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை: ஸ்டாலின் திறந்து வைத்தார்!