அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 2) ஒத்திவைத்துள்ளது.
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகளில் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.
இன்று மீண்டும் தொடர்ந்த விசாரணையில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் முன்பு அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.
இன்று காலை அவர் தனது வாதத்தில்,
“ஊழல் உட்பட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜி மீது கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் விசாரணை நடத்த விடாமல் அனைத்து வகைகளிலும் இடையூறு செய்தார். எனவேதான் அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. எனவே தனிப்பட்ட முறையில் அவரிடம் விசாரணை நடத்துவது மிக மிக அவசியமாகும். .
ஒருவர் நீதிமன்ற காவலில் இருக்கும் போது அவரை ஒப்படைக்கும்படி ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்ய முடியாது.
மருத்துவர் ஒப்புதல் அளித்தால் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த எங்களுக்கு அனுமதி உண்டு. குற்றம் சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உரிமையுள்ளது.
ஆனால் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்லாமல் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் அதுவும் மறுக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியை விசாரணைக்காக காவலில் எடுக்கிறோமே தவிர காவலில் வைப்பதற்காக அல்ல. மருத்துவ காரணங்களால் அவரை விசாரிக்க முடியவில்லை.
காவலில் வைத்து விசாரணை செய்து உண்மையை எடுத்துரைப்பது எங்கள் உரிமை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையும் கூட.
நீதிமன்ற நடவடிக்கைகளால் கடமையை செய்ய முடியவில்லை” என்று வாதம் செய்தார்.
தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகும் துஷார் மேத்தா தனது வாதத்தை தொடர்ந்தார். அப்போது, ”தற்போது செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். கஸ்டடி வழங்காவிட்டால் விசாரணை பாதிக்கப்படும். கைதுக்கான காரணங்களை ஏற்கனவே கூறிவிட்டோம்.
அமலாக்கத் துறை விசாரணை ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான காரணங்களையும் விளக்கிவிட்டோம். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். அப்படி விசாரித்தால்தான் பல்வேறு விஷயங்களுக்கு தீர்வு காண முடியும்.” என்று துஷார் மேத்தா தனது வாதத்தை நிறைவு செய்தார்.
இதனையடுத்து இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
கிறிஸ்டோபர் ஜெமா
கோடிக்கணக்கில் கடன்… கைவிட்டு போன கம்பெனி: பிரபல கலை இயக்குநர் தற்கொலை!
”பேச்சே கிடையாது… வீச்சு தான்”: ஜெயிலர் டிரெய்லர் எப்படி இருக்கு?