அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவரது மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 26) மதியம் 2 மணிக்கு வந்தது.
அப்போது, எவ்வளவு நேரம் வாதிடுவீர்கள் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ஒரு நாள் முழுவதும் தேவை, இன்று மாலை 4 மணிக்கு முன்பாக கண்டிப்பாக நான் முடிக்க மாட்டேன் என பதில் அளித்தார்.
மேலும், “குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167 -ன் படி 24 மணி நேரத்தில் விசாரணையை முடிக்க முடியாது என தோன்றினால் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது காவல்துறை அதிகாரிகளுக்கு உட்பட்டதே தவிர இதன் அடிப்படையில் செயல்பட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது.
அதே வேளையில் அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகளாக கருதப்படும் வரை இந்த வேறுபாடு என்பது சிக்கலானது. சட்ட விதிகளின்படி கைது செய்யப்பட்டு நடத்தப்படுகிறோமா என்பதை கருத்தில் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் செந்தில் பாலாஜிக்கு உரிமை உண்டு” என்றும் கபில் சிபல் வாதம் வைத்தார்.
தொடர்ந்து அவர், “அமலாக்கத்துறை காவல் அதிகாரிகள் இல்லை. அப்படி இருக்கையில் அமலாக்கத் துறையால் எப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்? சுங்கத்துறை அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியுமா? முடியாது. காவல்துறை தான் கைது செய்ய முடியும்.
கடத்தலில் ஈடுபடுபவரை சுங்கத் துறை அதிகாரியால் கைது செய்ய முடியாது. அவரை காவல் துறையில் தான் ஒப்படைக்க முடியும். இது அமலாக்கத் துறைக்கும் பொருந்தும்” என்று வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து நீதிபதி போபண்ணா, “அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
அதற்கு கபில் சிபல், “அமலாக்கத்துறையினர் நீதிமன்ற விசாரணைக்குத் தான் அனுப்ப முடியும் எனும்போது எவ்வாறு விசாரணை நடத்த முடியும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கின் விசாணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். வாதங்களை நாளைக்குள் நிறைவு செய்யும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“விவசாயிகளிடம், என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறினால்…” : வேல்முருகன் கண்டனம்!
திமுக ஃபைல்ஸ் 2 – ரூ.5600 கோடி ஊழல் : ஆளுநரை சந்தித்த அண்ணாமலை