வைஃபை ஆன் செய்ததும் செந்தில்பாலாஜி விவகாரம் பற்றிய பல்வேறு நிகழ்வுகளின் வீடியோக்கள் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 15ஆம் தேதி அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் ஜூன் 15ஆம் தேதி இரவு செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கு இடையே செந்தில் பாலாஜி கைது விவகாரத்தை அதிமுக பாஜக ஆகிய கட்சிகள் வீரியமாக கையில் எடுத்திருக்கின்றன. ஜூன் 15ஆம் தேதி பகல் பொழுதில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், ’திமுகவை சீண்டி பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லாவித அரசியலும் செய்யத் தெரியும்’ என்று வீடியோ வெளியிட்டு ஆவேசத்தை காட்டினார்.

சில மணி நேரங்களில் அதிமுக பிரமுகர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆளுநர் ரவியை சந்தித்து செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இன்னொரு பக்கம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அரியலூர், சிவகங்கை பொதுக் கூட்டங்களில் பேசியபோது… ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன் ஆகியோர் பதறி அடித்துக் கொண்டு செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்த்து, ‘அமலாக்கத்துறை அடிச்சும் கேப்பாங்க என் பெயரை சொல்லிடாதீங்க’ என்று தெரிவித்திருப்பதாக அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
அது மட்டுமல்ல, ‘செந்தில் பாலாஜி ஏற்கனவே நான்கு ஐந்து கட்சிகளில் இருந்தவர். அவர் அமலாக்கத்துறை விசாரணை முடிந்து வெளியே வரும்போது வேறு கட்சிக்கு சென்றாலும் ஆச்சரியம் இல்லை’ என்றும் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

இதன் மூலம் பாஜகவின் டார்கெட் செந்தில் பாலாஜி அல்ல… அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோருக்கு சட்ட ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களை கைது செய்வது தான் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
இதற்கான இன்னொரு முக்கியமான திட்டத்தையும் கையிலெடுத்துள்ளது பாஜக. அதாவது, செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை தமிழ்நாடு நீதிமன்றத்தில் நடந்தால்… அவர் தமிழ்நாடு அரசு நிர்வாகத்துக்கு உட்பட்ட புழல் சிறையில் இருந்தால் முறையாக நடக்காது. அதனால் செந்தில் பாலாஜி வழக்கை டெல்லி அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுக்கவும் அல்லது வழக்கு தொடரவும் ஏற்பாடுகள் பாஜக தரப்பில் நடக்கின்றன.
ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரி அப்போதைய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் ஜெயலலிதா மீது வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

அதேபோல செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாட்டில் கிடைக்கும் சாதகங்களை ஒட்டுமொத்தமாக குறைப்பதற்காக அவரது மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளில் இறங்கி இருக்கிறது பாஜக” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.