அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை (ஜூலை 4) தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த ஜூன் 13-ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். இதனால் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க கூடாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது அமலாக்கத்துறை சட்டவிதிகளை பின்பற்றவில்லை. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது” என்று பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி தனது வாதங்களை முன் வைத்தார்.
இரண்டு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளை (ஜூலை 4) காலை 10.30 மணிக்கு ஆட்கொணர்வு மனு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
செல்வம்
திமுக எம்.பி ஞானதிரவியம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!