உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை நடவடிக்கை: தீர்ப்பை வாசிக்கும் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன்

அரசியல்

செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் மூன்றாவது நீதிபதி  கார்த்திகேயன் இன்று ஜூலை 14 பகல் 1.12 முதல் தீர்ப்பை வாசித்து வருகிறார்.

முன்னதாக இந்த வழக்கில் நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி நிஷா பானு தீர்ப்பளித்து இருந்தார்.
அதேநேரம் அமலாக்க துறையின் கைது நடவடிக்கையில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்றும் செந்தில் பாலாஜி இன்னும் பத்து நாட்கள் காவேரி மருத்துவமனையில் இருக்கலாம் அதன் பிறகு அவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும். அவர் உடல் நலம் முழுமையாக தேறிய பிறகு அமலாக்கத்துறை அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பளித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான கார்த்திகேயன் வசம் தலைமை நீதிபதியால் ஒப்படைக்கப்பட்டது.
ஜூலை 11, 12 தேதிகளில் செந்தில் பாலாஜி தரப்பிலும் அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இன்று  செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதங்களை தொடர்ந்தார்.
அதன் பிறகு பிற்பகல் 1:12 மணிக்கு இவ்வழக்கில் தனது தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார் நீதிபதி கார்த்திகேயன்

செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்த கருத்துகளை சுட்டிக் காட்டினார் நீதிபதி கார்த்திகேயன்.  உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியே அமலாக்கத்துறை ஜூன் 13 ஆம் தேதி செந்தில்பாலாஜியிடம் சோதனை நடத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு  இரு தரப்பினராலும்  இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்சுக்கு தெரிவிக்கப்படவே இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நான் ஆராயவில்லை என்றால் நான் என் கடமை தவறியவனாகிவிடுவேன். ஏன் என்றால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தது” என்று குறிப்பிட்ட நீதிபதி, செந்தில்பாலாஜி மனைவி மேகலா தன் அபிடவிட்டில் தெரிவித்த கருத்துகளையும் தீர்ப்பில் பதிவிட்டுள்ளார்.

“ஜூன் 13 ஆம் தேதி சோதனையின் போது  செந்தில்பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் அமலாக்கத்துறை அவருக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் டார்ச்சர் செய்தார்கள். அதனால்தான் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்படும் நிலைக்கு சென்றது.  மேலும் விசாரணைக்கான சட்ட ரீதியான காரணங்கள் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை. தலைமைச் செயலகத்தில் இருக்கும் அவரது அறையில் சோதனை நடத்தப்பட்டதற்கான சட்டக் காரணங்களும் சொல்லப்படவில்லை. அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் ஜூன் 13 ஆம் தேதி காலை  7 மணி முதல் ஜூன் 14 அதிகாலை 2 மணி வரை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் சட்ட விரோத காவலில் வைத்து, தாக்கியிருக்கிறார்கள் என்றும் அவரது மனைவி  தெரிவிக்கிறார்” என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி.

தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி கார்த்திகேயன் வாசித்து வருகிறார்.

 

 

 

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *