போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி செய்த வழக்கில் விசாரணையை முடிக்க செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றது தொடர்பான வழக்கில் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்தும் உச்சநீதிமன்றம் மார்ச் 16-ஆம் தேதி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் வழக்கின் விசாரணையை முடிக்க 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று மத்திய குற்றப்புலனாய்வு தரப்பு உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி, “செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
அபோது நீதிபதிகள், “அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் வேலையை முடிப்பார்கள். 24 வருடமானாலும் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பார்கள். விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்ற தகவலை அரை மணி நேரத்தில் இங்கு அளிக்கவில்லையென்றால் தமிழ்நாடு டிஜிபி மற்றும் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும். இல்லையெனில், சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றமே அமைக்கும் என்ற உத்தரவுடன் வழக்கை ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
செல்வம்
அம்பேத்கரின் குரலை ஒலிக்க விட்டேன்: ஃபஹத்தை வாழ்த்திய மாரி
என்.எல்.சி போராட்டம்: ”தூண்டிவிடும் அன்புமணி”… வறுத்தெடுத்த அமைச்சர்!