செந்தில் பாலாஜி வழக்குத் தொடர்பாக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை ஒரு வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது.
இதனடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து செந்தில் பாலாஜியை கைது செய்தது. ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தவர்களில் ஒருவரான ஒய்.பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 22) விசாரணைக்கு வந்த போது,தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே இவ்வழக்கில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. செந்தில் பாலாஜியை பாதுகாக்கிறது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால்தான் விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை எனவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து ஆளுநருக்கு அனுப்பிய ஆவணங்களின் விவரங்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜி வழக்கில் நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு அரசு வழக்கறிஞர் பெயரை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம்… பங்குச்சந்தையில் ஐந்து வருடங்களுக்குத் தடை: செபி உத்தரவு!
வாழை, கொட்டுக்காளி…இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் படங்கள்!