அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, “அமலாக்கத்துறை காவல் அதிகாரிகள் இல்லை. அவர்களால் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க முடியாது. நீதிமன்ற காவலில் இருந்து செந்தில் பாலாஜிக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். வழக்கை அடுத்த வாரம் விரிவாக விசாரிக்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை விசாரிக்க வேண்டியது அமலாக்கத்துறையின் உரிமை மட்டுமல்ல, கடமை. செந்தில் பாலாஜிக்கு உண்மையில் உடல்நலக்குறைவு ஏற்படவில்லை. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும் போது விரிவாக விசாரிக்க இயலும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வமான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
பெங்களூரு ‘இந்தியா’ கூட்டம்: கமல் ஏன் கலந்து கொள்ளவில்லை?
அங்கே கொஞ்சம்…இங்கே கொஞ்சம்: அன்புமணியின் கூட்டணி பிளான்!