senthil balaji case investigation

சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் செந்தில் பாலாஜி

அரசியல்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இன்று (ஆகஸ்ட் 28) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அன்றைய தினமே இரவு 9 மணியளவில் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 5 நாட்கள் விசாரித்தது.

தொடர்ந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் செந்தில் பாலாஜியை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை 120 பக்க குற்றப்பத்திரிக்கையும், 3 ஆயிரம் பக்கத்திற்கும் அதிகமான ஆவணங்களையும் தாக்கல் செய்தது.

அதுமட்டுமின்றி மேலும் 5 நாட்கள் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது.

ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமலாக்கத்துறை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

அந்த மனுவில், “செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கிலும், அவரது மனைவி மேகலாவின் வங்கிக் கணக்கிலும் கணக்கில் காட்டப்படாத அதிகளவு பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆதாரங்களைக் காட்டி விசாரித்த போது உரிய விளக்கம் அளிக்காமல் மழுப்பலான பதிலை அளித்தார்.

போக்குவரத்துத் துறையில் பணி அமர்த்துவதற்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கூட்டுச் சதி நடைபெற்றுள்ளது.

விசாரணைக்கு செந்தில் பாலாஜி உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதே சமயம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தது.

இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

எனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 25-ஆம் தேதியுடன் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் செந்தில் பாலாஜி இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மோனிஷா

எஸ்.ஐ தேர்வில் ‘பிட்’ அடித்த போலீஸ்காரரின் மனைவி!

உலக தடகள சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த நீரஜ் சோப்ரா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *