அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார், ஆனால் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியதை அடுத்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உத்தரவிட்டது.
உத்தரவு கிடைத்த அன்றைய தினம் இரவே புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது அமலாக்கத்துறை. ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை 5 நாட்கள் விசாரணைக்குப் பிறகு செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அன்றைய தினமே, செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
மோனிஷா
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றினாரா? – ஸ்டாலின் கேள்வி!