சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 16) சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிவத்தனை வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு, ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கில் சாட்சிகளின் மீதான குறுக்கு விசாரணை நீதிபதி அல்லி முன்பாக இன்று தொடங்கியது.
இந்த வழக்கில் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதைய கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளர் ஹரிஷ் குமார் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
வங்கி தலைமை மேலாளர் அளித்த பதில்கள் சிலவற்றிற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவித்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் அசல் ஆவணங்கள் இல்லை என்றும் இதில் கூடுதல் ஆவணங்களை தற்போது புதிதாக சேர்த்திருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பின் குறுக்கு விசாரணைக்காக வழக்கு விசாரணை மீண்டும் ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், 55-ஆவது முறையாக செந்தில் பாலாஜி காவல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விருதுகளை குவித்த ‘ஆடு ஜீவிதம்’! : ஆனால் ஏ.ஆர் ரகுமானுக்கு மட்டும்…
ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல்கள் எப்போது?