அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.
அமலாக்கத் துறை தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு வரும் ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் அமலாக்கத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்கு முன் சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை. தாங்கள் கொடுத்த சம்மனை அவர் வாங்க மறுத்தார். அமலாக்கத்துறை அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் வேறு வழியின்றி அவரை கடைசி நடவடிக்கையாக கைது செய்தோம். அவர் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை அவரை காவலில் எடுக்கவில்லை. வருங்காலங்களில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.
கடந்த ஜூன் 3ஆம் தேதி நடந்த ரெய்டின் போது செந்தில் பாலாஜியும் உடன் இருந்தார். அவரை சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை. சாட்சியங்களை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால்தான் செந்தில் பாலாஜியை கைது செய்தோம்.
பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டது குறித்து அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவரை கைது செய்வதற்கு முன் அவரது குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது” என்று கூறியுள்ளது.
பிரியா
செந்தில் பாலாஜி வழக்கு: காவலை எதிர்த்து பிரமாணப் பத்திரம் தாக்கல்!
வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை: முதல்வர் அறிவிப்பு!