செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை இன்று (ஜூன் 19) மேல்முறையீடு செய்துள்ளது.
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில், செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதனடிப்படையில் ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்றது.
அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி உயர் நீதிமன்ற உத்தரவுபடி காவேரி மருத்துவமனையில் ஜூன் 15 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அவரை ஜூன் 23 ஆம் தேதி வரை காவலில் எடுக்க அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஜூன் 16 ஆம் தேதி இந்த அனுமதி வழங்கப்பட்டும், மருத்துவ காரணங்களால் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையால் விசாரணை நடத்த முடியாமல் சிக்கல் நீடித்து வருகிறது.
வரும் ஜூன் 21 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படும் நிலையில் இன்று அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க அமைச்சர் என்பதால் விசாரணை பாதிக்கப்படும். செந்தில் பாலாஜி ஏற்கனவே காவலில் இருப்பதால் அவரது மனைவி தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டது.
இதை முதலில் ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறு கூறியது.
ஆனால், செந்தில்பாலாஜி செல்வாக்கு மிக்க அமைச்சர் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்ததை அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டியதால்… இவ்வழக்கை ஜூன் 21 ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
பிரியா
தங்கம் வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!
மகனுக்கு எம். பி சீட்… நவாஸ் கனியை ஓரங்கட்டும் கண்ணப்பன்: ராமநாதபுரம் ரகளை பின்னணி!
கலைஞர் கோட்டம் திறப்பு விழா: உடன்பிறப்புகளை அழைத்த ஸ்டாலின்
டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜி தம்பி டெல்லிக்கு விட்ட தூது!