“செந்தில் பாலாஜி குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை” – அமலாக்கத்துறை!

Published On:

| By Monisha

senthil balaji case ED in special court

செந்தில் பாலாஜி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை என்று சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 8 முதல் 12 வரை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பிறகு ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதில், ”செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கிலும், அவரது மனைவி மேகலாவின் வங்கிக் கணக்கிலும் கணக்கில் காட்டப்படாத அதிகளவு பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆதாரங்களைக் காட்டி விசாரித்த போது உரிய விளக்கம் அளிக்காமல் மழுப்பலான பதிலை அளித்தார்.

போக்குவரத்துத் துறையில் பணி அமர்த்துவதற்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் கூட்டுச் சதி நடைபெற்றுள்ளது. விசாரணைக்கு செந்தில் பாலாஜி உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதே சமயம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. எனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

மோனிஷா

“நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும்” – ஸ்டாலின்

அர்ஜுன் 40: தொடங்கி வைத்த ‘நன்றி’!