முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று (மார்ச் 4) பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யவில்லை. சட்டப்படி அனைத்து விசாரணைகளும் நடத்தி தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி குற்றத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதை ஏற்கனவே உச்ச, உயர்நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளதால், அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி தரப்பில், “இந்த வழக்கை அடுத்த வாரம் தள்ளிவைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி அல்லி, மார்ச் 6-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். மேலும், செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பை மார்ச் 6-ஆம் தேதி வரை 23-வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலெக்சன் ஃப்ளாஷ்: இப்டியே உசுப்பேத்தி பிரிச்சி விட்றாதீங்க? திமுக அமைச்சர் சொன்ன கூட்டணி மேட்டர்
திராவிடம் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது: ஆளுநர் ரவி