அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு தற்போது தனி அறையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி, தனது கணவரை அமலாக்கத் துறை சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஜூன் 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார்.
அமலாக்கத் துறை தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால், வழக்கை ஜூன் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்ந்துள்ளார்.
ஏற்கனவே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “மத்திய விசாரணை அமைப்புகள் தனது கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலே தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை மிரட்டி வந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், “கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காததால், காவலில் எடுக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை நிராகரிக்க தங்கள் தரப்பு தாக்கல் செய்த மனுவை நீதிபதி சரியாக பரிசீலிக்கவில்லை.
அதாவது ஜூன் 14 ஆம் தேதி தனது கணவர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நீதிபதி அங்கு வந்தார்.
அப்போது செந்தில் பாலாஜியை காவலில் வைக்க அனுமதிக்கக் கூடாது என்று மனு கொடுத்தோம். இதுகுறித்து நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறிவிட்டு நீதிபதி சென்றார்.
ஆனால் நீதிமன்றத்துக்கு சென்றதும் ஏற்கனவே அமைச்சரை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளதால், காவலை நிராகரிக்க வேண்டும் என்ற கேள்வியே எழாது என்று தெரிவித்துவிட்டார். இது சட்டவிரோதமானது” என்று கூறியுள்ளார்.
நாளை மறுநாள் ஜூன் 27 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார் செந்தில் பாலாஜியின் மனைவி.
பிரியா
வி. பி. சிங்கிற்கு சென்னையில் சிலை: முதல்வர் அறிவிப்பு!
திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு?