அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்னிலையில் இன்று (ஜூன் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, “சட்டவிரோதமாக நள்ளிரவில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளனர்.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி கைது செய்வதற்கு முன்பாக உரிய நோட்டீஸ் வழங்கப்படவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. விசாரணையின் போது செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டார்.
அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. மேல் சிகிச்சைக்காக அவரை காவேரி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் ஆஜராகி,
“அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை செந்தில் பாலாஜி பெற மறுத்தார். விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.
கைது செய்வதற்கு முன்பாக தொலைபேசி மூலம் செந்தில் பாலாஜி சகோதரர் மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொண்டோம். இருவரும் தொலைபேசியை எடுக்கவில்லை.
இ – மெயில் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. கைது செய்யப்படுவோம் என தெரிந்தே செந்தில் பாலாஜி மெமோவை பெற மறுத்தார்.
ரிமாண்ட் ஏற்கப்பட்டதால் ஜாமீன் தான் கோர முடியும். ரிமாண்டை நிராகரிக்குமாறு கோர முடியாது. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் இன்று உடல்நலக்குறைவு என்கிறார்.
செந்தில் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படும். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ குழுவை நீதிமன்றமே அமைக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு அவரை மாற்றக் கூடாது” என்று தெரிவித்தார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்
ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு!
டிஎன்பிஎல் கிரிக்கெட்… ஒரே பந்தில் 18 ரன்கள் வழங்கிய சேலம் வள்ளல்!