வைஃபை ஆன் செய்ததும் கஸ்டடியின் மூன்றாவது நாள் அப்டேட் என்ன என்ற கேள்வி வந்து இன்பாக்ஸில் விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் அமலாக்கத் துறையின் கஸ்டடியில் இன்றுடன் (ஜூன் 18) மூன்றாவது நாளை தொட்டிருக்கிறார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜூன் 16ஆம் தேதி முதல் எட்டு நாட்களுக்கு செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம் என்று பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
அதே நேரத்தில் காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அனேகமாக வரும் 20ஆம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றி காவேரி மருத்துவமனை நிர்வாகம் கொடுத்து வரும் அப்டேட்டுகளின் அடிப்படையிலும் அவரிடம் அமலாக்கத்துறை கஸ்டடி விசாரணை செய்வது தாமதமாகி வருகிறது.
இப்படியே நீதிமன்றம் கொடுத்த எட்டு நாட்களும் கழிந்து விட்டால்… அதன் பிறகு இதய பைபாஸ் சிகிச்சையும் செந்தில் பாலாஜிக்கு நடந்திடும் பட்சத்தில் மருத்துவ ரீதியாக அவருக்கு ஓய்வு தேவைப்படும். அதனால் மீண்டும் கஸ்டடி எப்போது என்று குழப்பம் அமலாக்கத்துறை அதிகாரிகளிடையே நிலவுகிறது.
இதற்கிடையே செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் கொடுத்துள்ளது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் அவர் வீட்டு வாசலில் சம்மனை ஒட்டி இருக்கிறது அமலாக்கத்துறை.
செந்தில்பாலாஜிக்கு பக்க பலமாக இருப்பது அவரது தம்பி அசோக் தான். மே 16ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்கு ஒரு மாத காலம் முன்பிருந்தே டெல்லியில் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்தி பல்வேறு லாபிகளை செய்தவர் அசோக்.
நீதித்துறையில் தொடர்பு உள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் மூலமும் பலத்த முயற்சிகளை செய்து அதில் தோல்வி அடைந்தார் அசோக்.
இந்த நிலையில் மே கடைசி வாரத்தில் அசோக்குமாரை குறி வைத்து பல்வேறு இடங்களில் நடந்த வருமானவரித் துறை ரெய்டுக்கு பிறகு… அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலே இல்லை.
லண்டனில் இருக்கிறார் என்றும் பெங்களூருவில் இருக்கிறார் என்றும் கரூரில் தான் இருக்கிறார் என்றும் வெவ்வேறு தகவல்கள் உலவி வருகின்றன.
செந்தில் பாலாஜியிடம் உடனடியாக கஸ்டடி விசாரணை நடத்த இயலாத நிலையில் எப்படியாவது அசோக்குமாரை கஸ்டடிக்குள் கொண்டு வந்திட தீவிரமாக இருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
ஆனால் அசோக் குமாரோ இப்போதும் தனது டெல்லி பாஜக, ஆர்எஸ்எஸ் தொடர்புகள் மூலம் வேகவேகமாகச் செல்லும் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளுக்கு பிரேக் போடுவதற்கு தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் கொங்கு வட்டாரத்தில்.
அந்தத் தூது எந்த அளவுக்கு எடுபடும் என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்துவிடும்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
மகனுக்கு எம்.பி சீட்… நவாஸ் கனியை ஓரங்கட்டும் கண்ணப்பன்: ராமநாதபுரம் ரகளை பின்னணி!
கலைஞர் கோட்டம் திறப்பு விழா: உடன்பிறப்புகளை அழைத்த ஸ்டாலின்