கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் புதிதாக கட்டி வந்த பங்களா வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஆண்டாள் கோவில் கிழக்கு மண்மங்கலம் தாலுகாவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் 2.49 ஏக்கரில் பங்களா வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
இந்த வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மதியம் 12.30 மணியளவில் சோதனை செய்தனர். பின்னர் பங்களா வீடு கட்டுவது தொடர்பான ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு சம்மன் அவர்கள் வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து அசோக் குமார் பங்களா வீட்டை முடக்கியிருப்பதாக மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
அந்த நோட்டீஸில், “சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அசோக் குமார் மனைவி நிர்மலாவிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது சேலம் பைபாஸ் சாலை, ஆண்டாள் கோவில் கிழக்கு கரூர் -63902 முகவரியில் உள்ள அசோக் குமார் மனைவி நிர்மலாவிற்கு சொந்தமான வீடு முடக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அனுமதியில்லாமல் இந்த வீட்டை வேறு யாருக்கும் மாற்றவோ விற்கவோ கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் ஜூன் 13 ஆம் தேதி சோதனை செய்த அமலாக்கத்துறை ஜூன் 14 ஆம் தேதி அவரை கைது செய்தனர்.
உச்சநீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசூழலில் செந்தில் பாலாஜி சகோதரருக்கு சொந்தமான பங்களா வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
களமிறங்குகிறது ஏத்தரின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள்! வெளிவரப்போகும் 3வது மாடல் என்ன?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்!