முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மதியம் நடைபெற உள்ள நிலையில் அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.
இந்த நிலையில் இரண்டாவது முறையாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவைக் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “230 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
அமலாக்கத் துறையின் பதிலுக்காக வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அதன்படி செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்த சூழலில் அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் செந்தில் பாலாஜி வேண்டும் என்றே வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த நினைக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அதற்கு பதிலாக வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“ஆவணங்கள் திருத்தப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது. நாங்கள் உடனடியாக விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம். அவரது சகோதரர் அசோக் தலைமறைவாக இருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்கப்படுவார்கள்” என்றும் அமலாக்கத் துறை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சருக்கு அனுப்பப்பட்ட ராஜினாமா கடிதம் ஆளுநரின் ஒப்புதலுக்காகவும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து ஆளுநரும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வதற்கு ஒப்புதல் வழங்கினார்.
எனவே இன்றைய விசாரணையின் போது, தனது பதவியை ராஜினாமா செய்ததை ஒட்டி செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை முன் வைக்கும் என்று கூறப்படும் சூழலில், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றம்!
சபாநாயகர் கேள்வி… வானதி ரியாக்ஷன்… சட்டப்பேரவையில் சிரிப்பலை!